பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
பூரணன் நானென்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்.

பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
பொன்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி
கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழிந்திடும்
நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்.

சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான்
சத்தொடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்.

ஜெய ஜெய வடுக நாதனே சரணம்
வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய க்ஷேத்திர பாலனே சரணம்
ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்.