பெருவுடையார் கோவிலில் உள்ள வழிபாடுகள்
வார வழிபாடு - ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரத்தில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெறும். பிரதி வியாழக்கிழமை தோறும் பெரிய நாயகி அம்மன் சன்னதியில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு நிறைவு பெறும்.
பஞ்சமி - ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமியில் மஹா வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும். மேலும் ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதங்களான ஆனி-ஆடி மாதத்தில் ஆஷாட நவராத்திரி 11 நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். ஒவ்வொரு பஞ்சமியிலும் வழிபாடுகள் முடிந்தபின் இறுதியில் ஈசான சிவம் குமார் அவர்களால் நிலக்கடலை தானமாக வழங்கப்படும்.
பிரதோஷம் - ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷ நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை நந்திஎம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும்.
சித்தர் கருவூரார் வழிபாடு - ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரம், சித்ரா பெளர்ணமி, தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசி மகம் ஆகிய நாட்களில் காலை அபிஷேகமும், மாலை சிறப்பு ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடைபெறும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய், சனிக்கிழமைகளில் கூட்டு வழிபாடு மாலை 6.45 மணி முதல் இரவு 7.15 மணி வரை சித்தர் கருவூரார் சன்னதியில் நடைபெறும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் திலகர் திடல் வாசலில் சித்தர் கருவூரார் சமரச சன்மார்க்க சங்க அறக்கட்டளையால் அன்னதானம் வழங்கப்படும்.
கிரிவலம் - ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நாட்களில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பெரிய கோவிலைச் சுற்றி கிரிவலம் நடைபெறும். பெருவுடையாரின் அடியார்களால் அன்னதானமும் வழங்கப்படும்.
நவராத்திரி - ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை முடிந்த மறுநாள் முதல் 10 நாட்களுக்கு நவராத்திரி நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும்.
சதய விழா - ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் சதயம் நட்சத்திரத்தில் சிவபாதசேகரன் மாமன்னன் ராஜராஜசோழனுக்கு வெகு சிறப்பாக விழா நடைபெறும். அன்றைய தினத்தில் பெருவுடையாருக்கு பலவிதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெறும்.
அன்னாபிஷேகம் - ஐப்பசி பெளர்ணமி அன்று பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.
சிவராத்திரி - ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி விழாவானது மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
நடராசர் - ஒவ்வொரு ஆண்டும் நடராசருக்கு 6 அபிஷேகங்கள் நடைபெறும். இவற்றில் மார்கழியில் வரும் அபிஷேகம் ஆருத்ரா தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதற்கடுத்து ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் நடக்கும் அபிஷேகத்தை ஆனித்திருமஞ்சனம் என்பர். இவை தவிர சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரம், ஆவணி, புரட்டாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசி, மாசி வளர்பிறை சதுர்த்தசி ஆகிய நாட்களில் நடராசருக்கு அபிஷேகம் நடைபெறும்.
தியாகராஜர் - சித்திரை முதல் நாள் மற்றும் ஆடி 1 தட்சிணாயன புண்ணிய காலம், தை 1 உத்திராயண புண்ணிய காலம் சூரியனின் பெயர்ச்சியைப் பொறுத்து அபிஷேகம் நடைபெறும்.
திருக்கல்யாணம் - ஆனி மாதம் வரும் பெளர்ணமி தினத்துக்கு முந்தைய நாள் சதுர்த்தசி திதியில் திருக்கல்யாணம் நடைபெறும்.