நுழைவுரை

தமிழகத்திலே சமணமும் பெளத்தமும் ஓங்கி சைவமும், தமிழும் அழியக்கூடிய நிலையிலே பேரருளாளர்களாக நால்வர் தோன்றி தங்களுடைய ஆன்மீக பலத்தால், இறையருளால் இருண்ட காலமாக இருந்த தமிழகத்திலே தெய்வீகத்தையும், சைவத்தையும் தமிழையும் புத்துயிர் பெறச் செய்தார்கள். அவர்கள் தோன்றிருக்காவிடில் தமிழும், சைவமும் அழிந்துபட்டு போயிருக்கும். நாத்திகம் பேசி நாத்தழும்பேறுபவர்கள் கூட தமிழை வளர்த்த பெருமைக்காகவாவது அவர்களை போற்றி வணங்க வேண்டும். இல்லையாயின் நாம் அனைவரும் நன்றி கெட்டவர்கள் ஆவோம்.
“Bless me to multiply thy worshippers” (இறைவா தங்களுடைய அடியார்களின் கூட்டத்தை பல மடங்கு பெருக்குவதற்கு எனக்கு அருள் புரிவாயாக!) இதுவே எங்களுடைய வழிபாட்டின் குறிக்கோளாகும். அதன்படியே செயல்பட்டும் வருகின்றோம்.

காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய பாடல்

மேலை விதியே வினையின் பயனே விரவார் புரமூன்றெரி செய்தால்

காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா

மாலை மதியே மலைமேல் மருந்தே மறவேன் அடியேன் வயல்சூழ்ந்த

ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.

காலை எழுந்தவுடன் நமக்கு முன்னே செல்லும் விதியும், வினையின் பயனும் காலையில் எழுந்து உன்னை தொழுவார் தங்களின் கவலையை நீக்குவாய் கறைக்கண்டனே மாலையில் உதிக்கும் நிலவுபோல் உவமை சொல்ல இயலா மருந்து போல் வயல்கள் சூழ்ந்த பயணகச்சூர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பருமானே, உன்னை போற்றி வணங்குகின்றோம்.

இரவில் தூங்கும்போது பாடும் பாடல் (திருவாவடுதுறை)

பதிக வரலாறு : நாயனார் மூன்றாம் திருப்பதிகத்தைப் பாடுகின்றார்.

திருச்சிற்றம்பலம்

மஞ்சனே மணியுமானாய் மரகதத் திரளுமானாய்

நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வினானே

துஞ்சும் போதாக வந்து துணையெனக்காகி நின்று

அஞ்சலென்றருள வேண்டும் ஆவடுதுறையுளானே.

பொருளுரை : திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் பெருமானே! ஈசனே தாங்கள் மைந்தராயும், மணியாயும், மரகதத் திரளாகவும், நெஞ்சினுள் புகுந்து, நினைவுகளை, நிகழ்விப்பவராகவும் தோன்றுபவரே! உறங்கும்போது அடியவனுக்குத் துணையாக வந்து காத்து அஞ்சேல் எனக் கூறி அருள்வாயாக. (இரவில் இத்திருப்பாடலை ஓதி உறங்குக.)
மஞ்சன் - மைந்தன் என்பதன் மரூஉ. போலி எனவும் கூறலாம்.

திருச்சிற்றம்பலம்