மகுட மொழிகள்

நம பார்வதி பதயே! அரகர மகா தேவா!

தென்னா டுடைய சிவனே போற்றி -

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

சீரார் பெருந்துறையும் தேவனடி போற்றி -

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

ஆடக மதுரை அரசே போற்றி -

கூடல் இலங்கு குருமணி போற்றி!

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி -

பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி!

பராய்த்துறை மேவிய பரனே போற்றி -

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!

அண்ணாமலையம் அண்ணா போற்றி -

கண்ணார் அமுதக் கடலே போற்றி!

ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி -

பாங்கார் பழனத் தழகா போற்றி!

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி -

சீரார் திருவையாறா போற்றி!

காவாய் கனகத் திரளே போற்றி -

கயிலை மலையானே போற்றி! போற்றி!!

குவளைக் கண்ணி கூறன் காண்க -

அவளும் தானும் உடனே காண்க!

சிற்சபேசா! சிதம்பரேசா!! (தீபாராதனை)

அருட்பெருஞ் ஜோதி!     அருட்பெருஞ் ஜோதி!

தனிப்பெருங்கருணை!!     அருட்பெருஞ் ஜோதி!

திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்


நால்வர் துதி

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி

ஆழிமிசைக் கன்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி

வாழிதிருநாவலூர் வன்றொண்டர் பதம்போற்றி

ஊழிமலி திருவாதவூரார் திருத்தாள் போற்றி.

பொருளுரை: பூழியர்கோன் வெப்பொழித்த: பாண்டிய மன்னனின் வெப்புநோய் நீக்கிய சீர்காழியில் தோன்றிய திருஞானசம்பந்தர் திருத்தாள் போற்றி. கல்லில் கட்டி கடலில் வீசினும் தோணிபோல் மிதந்து கரையேறிய திருநாவுக்கரசர் திருத்தாள் போற்றி. திருநாவலூரில் உதித்த சுந்தரர் பெருமான் திருத்தாள் போற்றி. ஊழிக் காலத்திலும் (ஊழி-பிரளயம்) நிலைத்து நிற்கும் திருவாதவூரில் வந்து உதித்த மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி.