சைவசமயச் சிறப்பு
சைவத்தின் மேற்சமயம் வேறில்லை அதில் சார் சிவமாம்
தெய்வத்தின் மேற்தெய்வம் இல்லெனும் நான்மறைச் செம்பொருள்
வாய்மைவைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும்
உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே.
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.
நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே.
சமர சூரபன் மாவைத் தடிந்தவேற்
குமரன் தாதைநற் கோழம்பம் மேவிய
அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள்
அமர லோகம தாளுடை யார்களே.
விநாயகர் துதி
கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூபல சாரு பக்ஷணம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.
திருவாசகச் சிறப்பு
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகமெனுந் தேன்.
வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறு மென்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே.