என்னுடைய இருளை ஏறத் துரந்தும்
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்
விளக்கவுரை :
என்னுடைய மன இருளை முற்றிலும் அகற்றியும், அடியவர் தம் மனங்களில் அன்பு விளங்க
குடியிருப்பனக் கொண்டுள்ள இலக்கமும், அந்த இலக்கினால் உண்டாகும் பெருமையும், நிலை பெற்ற பெரிய
மலையாகிய மகேந்திர மலையில் இருந்து கொண்டு திருவாய் மலர்ந்து அருளிய ஆகமங்களை உண்டாக்கி
அருளியும்.
சொற்பொருள் :
ஏறத்துரந்தும் - முற்றிலும் அகற்றியும். குடி - குடியிருப்பு. மன்னும் - நிலைபெற்ற.
கல்லாடத்துக் கலந்து இனிது அருளி
நல்லாளோடு நயப்புறவு எய்தியும்
பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னொடும்
எஞ்சாது ஈண்டும் இன்னருள் விளைத்தும்
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
விளக்கவுரை :
திருக்கல்லாடம் என்னும் தலத்திலே, பெண்களில் நல்லவளாகிய பார்வதி தேவியாரோடு
கலந்து, அடியவர் யாவரும் ஆர்வத்துடன் வழிபட இனிதாக எழுந்தருளியும்,
பஞ்சசயனம் என்னும் தலத்திலே, பால் போன்ற இனிமையும், தூய்மையும் கொண்ட சொற்களையுடைய
உமாதேவியாரோடும், குறையாது நாள்தோறும் பெருகுகின்ற தன் கருணையைக் காட்டியும், வேட
உருவத்துடன் முள் முருக்க மலர் போன்றதாகிய சிவந்த வாயினை உடைய உமாதேவியாரின்,
சொற்பொருள் :
நல்லாள் - பார்வதி தேவியார். நயப்புறவு - விரும்பிக் கலந்து, பான்மொழி - பால் போன்ற இனிய
சொற்களைக் கொண்ட உமாதேவியார். கிராதவேடம் - வேட வடிவம். கிஞ்சுகம் - முள் முருக்க மலர்.
விராவு கொங்கை நற்றடம் படிந்தும்
கேவேடராகிக் கெளிறு அது படுத்தும்
மாவேட்டாகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து
உற்ற ஐம்முகங்களால் பணித்து அருளியும்
விளக்கவுரை :
ஒன்றையொன்று பொருந்தும் மார்பகத்தின் அழகிய தடத்தில் மூழ்கியும், மீனவராகி கெளிற்று
மீன்களைப் பிடித்தும், பெருவிருப்பம் உடையதாகிய ஆகமங்களைக் கடலிலிருந்து கண்டெடுத்தும், மேலும்
அந்த ஆகமங்கள் எனப்படும் தெய்வநூல்களை மகேந்திர மலையிலிருந்து கொண்டு தம்முடைய ஐந்து
முகங்களால் ஓதியும்,
சொற்பொருள் :
கொங்கை - மார்பகம். கெளிறு - ஒருவகை மீன். மாவேட்டம் - பெரு விருப்பம் - உரிச்சொல்
தொடர்.
நந்தம் பாடியில் நான்மறை யோனாய்
அந்தமில் ஆரிய னாயமர்ந் தருளியும்
வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும்
நூறுநூ றாயிரம் இயல்பின தாகி
ஏறுடை ஈசன்இப் புவனியை உய்யக்