சொற்பொருள் :
மீட்டிங்கு - மீண்டும் இம்மண்ணுலகில், கள்ளப்புலக்குரம்பு - வஞ்சனை செய்யும் ஐம்புலன்களுக்கு இருப்பிடமாகிய உடல்.
அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து
விளக்கவுரை :
துன்பம் தரும் பிறவியை ஒழிப்பவனே! ஓ வென்று கூக்குரலிட்டுக் கூறுவதற்கு அரியவனைப்
புகழ்ந்து கூறி, அவனுடைய திருவடிகளில் சாற்றி சிவபுராணத்தைப் பொருள் உணர்ந்து கூறவல்லவர்,
சிவபுரத்தில் வாழும் சிவபெருமானின் திருவடிகளின் கீழ் திளைத்து, அனைவரும் வணங்குமாறு சென்று சிறந்த
வாழ்வைப் பெறுவர்.
சொற்பொருள் :
அல்லல் - துன்பம். ஏத்த - வணங்க.
திருச்சிற்றம்பலம்
2. கீர்த்தித் திருவகவல்
(தில்லையில் (சிதம்பரம்) பாடியது)
(சிவபெருமானின் திருவருளைப் புகழ்ந்தது)
மாணிக்கவாசகர், தம்மைத் தலைவியாகவும் சிவபெருமானைத் தலைவனாகவும் கொண்டு பாடியது இது.
இதனை ‘நாயகன் - நாயகி பாவம்’ என்பர்.
தோழி தலைவியைப் பார்த்து, “உன் தலைவன் பரத்தையரோடு தொடர்புடையவன்” என்கிறாள். அதனைக்
கேட்ட தலைவி தோழியைப் பார்த்து, “என் தலைவன் இத்தகைய பெருமைகளுக்கு உரியவன்” என்கிறாள்.
அடியார்களுடன் சிவபெருமான் கொண்ட தொடர்பே பரத்தையர் தொடர்பாக இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கீர்த்தித் திருவகவல் 146 அடிகளைக் கொண்டதாகும்.
(ஆசிரியப்பா)
திருச்சிற்றம்பலம்
தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்லுயிரெல்லாம் பயின்றன னாகி
எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோ ருலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்
விளக்கவுரை :
தில்லை என்னும் பழைமையான ஊரில், திருநடனம் ஆடிய திருவடிகளை உடையவன்.
பலவகை உயிர்களிலும் நிறைந்தவன். எல்லையற்ற பல்வேறு குணங்கள் அழகுற விளங்கியவன். இந்த
மண்ணுலகம், அந்த விண்ணுலகம் மற்றும் உள்ள தேவருலகம் - இவற்றில் பொருந்திய கலைகளைப்
படைத்தும், அவற்றை அழித்தும்,
சொற்பொருள் :
மூதூர் - முதுமை + ஊர் - பழமையான ஊர், எண்ணில் - எண்ணற்ற, தோற்றி - படைத்து.