சொற்பொருள் :
பரிமா - குதிரை. கனகம் - பொன். எங்கோன் - எம் தலைவனாகிய சிவபெருமான்.
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
அந்தண னாகி ஆண்டுகொண் டருளி
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்
மதுரைப் பெருநன் மாநக ரிருந்து
குதிரைச் சேவக னாகிய கொள்கையும்
விளக்கவுரை :
அரிமர்த்தன பாண்டிய மன்னனின் உள்ளம் கவரும் வகையில், சோதி வடிவில் காட்சியளித்த
பழமையும், அறவோன் ஆகி, என்னை ஆட்கொண்டவனாகி, இந்திரசாலம் என்னும் வித்தையைக் காட்டிய
தன்மையும், திருவாலவாய் எனப்படும் பெருநகரமான மதுரை மாநகரிலிருந்து சுந்தரசாமந்தன் என்னும்
படைத்தலைவனாகிய அடியவனுக்குக் குதிரைப் பணியாளனாய் ஆகிய தன்மையும்,
சொற்பொருள் :
தொன்மை - பழமை. இந்திரஞாலம் - ஒன்றை இன்னொன்றாக மாற்றும் மந்திர வித்தை.
ஆங்கது தன்னில் அடியவட் காகப்
பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும்
உத்தர கோச மங்கையு ளிருந்து
வித்தக வேடங் காட்டிய இயல்பும்
பூவண மதனிற் பொலிந்திருந் தருளித்
விளக்கவுரை :
அந்த மதுரை மாநகரிலே, “வந்தி” என்னும் வயது முதிர்ந்த சிவபெருமானின் அடியவளுக்காக
உரிமையுடன், வையையாற்றின் உடைந்த கரையினை அடைப்பதற்காகத் தன் தலைமீது மண்ணைச் சுமந்த
தன்மையும், ‘திருஉத்தரகோச மங்கை’ என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அறிவு வடிவம்
காட்டிய தன்மையும், ‘திருப்பூவனம்’ என்னும் திருத்தலத்தில் அழகுடன் விளங்கி,
சொற்பொருள் :
பாங்காய் - உரிமையுடன். பூவணம் - திருப்பூவனம் என்னும் சிவத்தலம்.
தூவண மேனி காட்டிய தொன்மையும்
வாத வூரினில் வந்தினி தருளிப்
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்
திருவார் பெருந்துறைச் செல்வ னாகிக்
கருவார் சோதியிற் கரந்த கள்ளமும்
விளக்கவுரை :
அங்குத் தூய்மையான மேனியைக் காட்டிய பழமையும், ‘திருவாதவூர்’ என்னும் சிவத்தலத்தில்
வந்து இனிதாக அருளி, திருவடிகளின் சிலம்பொலியைக் காட்டிய குணமும், செல்வம் கொழிக்கும்
திருப்பெருந்துறைக்குத் தலைவனாகி, மேலான ஒளியில் மறைந்த கள்ளமும்.
சொற்பொருள் :
தூவணமேனி - தூய திருவுடல். கரத்தல் - மறைத்தல்.
பூவல மதனிற் பொலிந்தினி தருளிப்
பாவ நாச மாக்கிய பரிசும்
தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து
நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும்
விருந்தின னாகி வெண்கா டதனில்
விளக்கவுரை :
திருப்பூவலம் என்னும் சிவத்தலத்திலே, அழகுடன் வீற்றிருந்து அடியவர்களுக்கு அருள்
செய்து, அவர்களுடைய தீவினைகளை அழித்த பாங்கும், தண்ணீர்ப் பந்தலைச் சயம்பெற வைத்து,
நல்ல நீர்த் தொண்டனாக இருந்த நலமும், ‘திருவெண்காடு’ என்னும் தலத்திலே, சிறுத்தொண்ட
நாயனாருக்கு விருந்தினனாக விளங்கியும்,