சொற்பொருள் : பூவலம் - திருப்பூவலம் என்னும் சிவத்தலம். சயம் - வெற்றி. வெண்காடு - திருவெண்காடு என்னும் சிவத்தலம்.

குருந்தின் கீழன்று இருந்த கொள்கையும்

பட்ட மங்கையில் பாங்காய் இருந்தங்கு

அட்டமா சித்தி அருளிய அதுவும்

வேடுவனாகி வேண்டுருக் கொண்டு

காடது தன்னில் கரந்த கள்ளமும்

விளக்கவுரை : அன்றைய நாளில் குருந்த மர நிழலில் வீற்றிருந்த கொள்கையும், திருப்பட்ட மங்கை என்னும் சிவத்தலத்திலே, அழகாய் இருந்தபடியே அங்கே எண்வகைச் சித்திகளையும் வெளிப்படுத்திய நிலையும், வேடனாக வந்து, விரும்பிய வடிவங்களைப் பெற்று காட்டில் ஒளிந்த வஞ்சகத் தன்மையும்.
சொற்பொருள் : அட்டமா சித்தி - அட்டம் - எட்டு. மா - பெரிய. எட்டுப் பெரிய சித்திகள். அவையாவன: 1. அணிமா, 2. மகிமா, 3. கரிமா, 4. இலகிமா, 5. பிராத்தி, 6. பிராகாமியம், 7. ஈசத்துவம், 8. வசித்துவம் என்பன.

மெய்க்காட்டிட்டு வேண்டுருக் கொண்டு

தக்கானொருவன் ஆகிய தன்மையும்

ஓரியூரில் உகந்து இனிது அருளிப்

பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்

பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்

விளக்கவுரை : தனது திருமேனியைப் பலவாறு காட்டியதோடு மட்டுமின்றி, தாம் விரும்பியவாறு வடிவம் கொண்டும், தக்கான ஒருவனாகிய மாறிய விதமும், திருவோரியூர் என்னும் தலத்திலே, மிகவும் விரும்பி இனிதாக எழுந்தருளி, இப்பூமியில் சிறு குழந்தையாக வடிவெடுத்த தன்மையும், திருப்பாண்டூர் என்னும் தலத்திலே அடியவர் திருக்கூட்டம் நெருங்க வீற்றிருந்தும்,
சொற்பொருள் : மெய் - உடல். உரு - உருவம். உகந்து - விரும்பி. பாலகன் - சிறுகுழந்தை. ஈண்ட - நெருங்க.

தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்

கோஆர் கோலம் கொண்ட கொள்கையும்

தேனமர் சோலைத் திருவாரூரில்

ஞானம் தன்னை நல்கிய நன்மையும்

இடைமருது அதனில் ஈண்ட இருந்து

விளக்கவுரை : திருத்தேவூர் என்னும் தலத்தின் தென் பகுதியில் இருக்கின்ற தீவில், பேரரசனாக அழகுருவம் எடுத்த கொள்கையும், தேன் சொரியும் மலர்ச் சோலைகளையுடைய திருவாரூரில், மெய்யறிவு வழங்கிய நலமும், ‘திருவிடைமருதூர்’ என்னும் தலத்திலே, அடியவர் திருக்கூட்டத்துடன் நெருங்கி வீற்றிருந்து,
சொற்பொருள் : தென்பால் - தென்திசையில். கோ - பேரரசன். இடைமருது - திருவிடைமருதூர் என்னும் திருத்தலம்.

படிமப் பாதம் வைத்த அப்பரிசும்

ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து

பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்

திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து

மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்

விளக்கவுரை : மென்மையான பொன்னடிகளைச் சூட்டியருளிய தன்மையும், காஞ்சி மாநகரில், இயற்கைத் திருவுருவாய் விளங்கி, இடப்பாகத்தை உமாதேவியாருக்கு வழங்கி, அதனால் உமையொரு பாகனாய் ஆகிய