தன்மையும், ‘திருவாஞ்சியம்’ என்னும் தலத்திலே, உமாதேவியாருடன் எழுந்தருளி உள்ளம் பெருமகிழ்ச்சி கொண்ட பாங்கும்.
சொற்பொருள் : ஏகம்பம் - திருவேகம்பம் - காஞ்சி மாநகர். மரு - மணம். குழலி - உமாதேவியார்.

சேவக னாகித் திண்சிலை ஏந்திப்

பாவகம் பலபல காட்டிய பரிசும்

கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்

ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்

ஐயா றதனிற் சைவ னாகியும்

விளக்கவுரை : போர் வீரனாக விளங்கி வில்லைக் கையில் தாங்கிப் பலவகையான பாவனைகளைக் காட்டிய தன்மையும், ‘திருக்கடம்பூர்’ என்னும் தலத்திலே, அடியவர் யாவரும் அருள்பெற அமர்ந்தும், ‘திருவீங்கோய்மலை’ என்னும் தலத்திலே, அழகான காட்சி தந்தும், ‘திருவையாறு’ என்னும் தலத்திலே, ஆதிசைவ அந்தணனாகத் திருக்கோலம் கொண்டும்,
சொற்பொருள் : திண்சிலை - பலம் பொருந்திய வில். எழில் - அழகு. ஐயாறு - ‘திருவையாறு’ என்னும் சிவத்தலம். வடமொழியாளர் இதனை, ‘பஞ்சநதீச்சுரம்’ என்பர்.

துருத்தி தன்னில் அருத்தியோ டிருந்தும்

திருப்பனை யூரில் விருப்ப னாகியும்

கழுமல மதனிற் காட்சி கொடுத்தும்

கழுக்குன் றதனில் வழுக்கா திருந்தும்

புறம்பய மதனில் அறம்பல அருளியும்

விளக்கவுரை : ‘திருத்துருத்தி’ என்னும் தலத்திலே விருப்பமுடன் அமர்ந்தும், ‘திருப்பனையூர்’ மீது விருப்பமுடையவன் ஆகியும், ‘திருக்கழுமலம்’ என்னும் தலத்திலே திருக்காட்சி தந்தும், ‘திருக்கழுக்குன்றத்தில்’ தவறாமல் விளங்கியும், ‘திருப்புறம்பயம்’ என்னும் தலத்திலே தருமங்கள் பலவற்றை அருளியும்.
சொற்பொருள் : அருத்தி - விருப்பம். வழுக்காது - தவறாது. அறம் - தருமம்.

குற்றா லத்துக் குறியா யிருந்தும்

அந்தமில் பெருமை அழலுருக் கரந்து

சுந்தர வேடத் தொருமுத லுருவுகொண்

டிந்திர ஞாலம் போலவந் தருளி

எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத்

விளக்கவுரை : ‘திருக்குற்றாலத்தில்’, குறுமுனி வேண்டுகோளுக்கு இணங்கி சிவலிங்கமாக விளங்கியும், முடிவில்லாத சிறப்புடைய தணலுருவத்தை மறைத்து, அழகான வடிவம் கொண்டு இந்திர ஞாலம் போலத் தோன்றியருளி, எவரெவர் இயல்புகளையும் தனக்குள் அடக்கிக் கொண்டு,
சொற்பொருள் : குறி - சிவலிங்க அடையாளம். அந்தமில் - முடிவு இல்லாத. அழலுரு - நெருப்பு வடிவம். கரந்து - ஒளித்து. சுந்தர வேடம் - அழகான வடிவம்.

தானே யாகிய தயாபரன் எம்மிறை

சந்திர தீபத்துச் சாத்திர னாகி

அந்தரத் திழிந்துவந் தழகமர் பாலையுட்

சுந்தரத் தன்மையொடு துதைந்திருந் தருளியும்

மந்திர மாமலை மகேந்திர வெற்பன்