விளக்கவுரை : தானாகிய அவனே முழுமுதற் கடவுளாகி, கருணை கொண்டவனாகிய எம் இறைவன், ‘சந்திர தீபம்’ என்னும் தலத்திலே, நூலாசிரியனாக விளங்கியும், விண்ணுலகிலிருந்து இறங்கி வந்து, அழகு விளங்கும் ‘திருப்பாலைவனம்’ என்னும் தலத்திலே அழகாக இருந்து அருள் வழங்கியும், மந்திர மலையாகிய மகேந்திர மலையை இருப்பிடமாகக் கொண்டவன் சிவபெருமான்.

சொற்பொருள் : தயாபரன் – கருணை வடிவமானவன். அந்தரத்திழிந்து – விண்ணிலிருந்து இறங்கி. மகேந்திர வெற்பன் – மகேந்திர மலையை இருப்பிடமாகக் கொண்டவன்.

அந்தமில் பெருமை அருளுடை அண்ணல்
எந்தமை ஆண்ட பரிசது பகரின்
ஆற்றல் அதுவுடை அழகமர் திருவுரு
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்
ஊனந் தன்னை யொருங்குடன் அறுக்கும்

விளக்கவுரை : சிவபெருமான் முடிவில்லாத சிறப்பும் அருளும் உடைய தலைவன். அவர் என்னை ஆண்டுக் கொண்டு எப்படியென்று சொல்வதானால், வலிமை வாய்ந்த அழகிய திருமேனி வடிவத்தைத் திருநீற்றுக் கோடுகளோடு உயர்வாகக் காட்டியும், பிறவி எனும் அந்தக் குறையை ஒருசேரப் போக்கும்.

சொற்பொருள் : அந்தமில் – முடிவில்லாத. அண்ணல் – தலைவன். இங்கு சிவபெருமானைக் குறித்தது. ஊனம் – குறை. ஒருங்கு – சேர்த்து.

ஆனந் தம்மே ஆறா அருளியும்
மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்
அழுக்கடை யாமல் ஆண்டுகொண் டருள்பவன்
கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும்

விளக்கவுரை : பேரானந்தம் தன்னையே பெருவெள்ளமாக அடியவர்களுக்கு அருளியும், தன் உடலின் இடப்பாகத்தை உமாதேவியாருக்கு வழங்கிய கருணையாளன் சிவபெருமான். பிரணவம் என்னும் முரசு முழங்கவும், அடியார்களின் உள்ளம் குற்றப்படாமல் ஆண்டருள் செய்பவன். சூலாயுதத்தைத் தன் கையில் ஏந்தி அருள் செய்தும்.

சொற்பொருள் : மாது – உமாதேவியார். மாப்பெருங் கருணையன் – பெருங் கருணையாளன். உரிச்சால் தொடர். நாதம் – பிரணவம். கறங்கவும் – ஒலிக்கவும். கழுக்கடை – சூலாயுதம்.

மூல மாகிய மும்மலம் அறுக்கும்
தூய மேனிச் சுடர்விடு சோதி
காதல னாகிக் கழுநீர் மாலை
ஏலுடைத் தாக எழில்பெற அணிந்தும்
அரியொடு பிரமற் களவறி யாதவன்

விளக்கவுரை : பிறவி என்னும் பெரு நோய்க்குக் காரணமாகிய ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று அழுக்குகளையும் அழுக்கின்றி பரிசுத்தத் திருமேனியின் ஒளியைப் பாய்ச்சுகின்ற சுடரொளி போன்றவன் சிவபெருமான். செங்கழுநீர் மலர்மாலையில் பற்றுடையவனாகி, அதனை அழகாக அணிந்தும், திருமாலும் நான்முகனும் அளவிட்டு அறிய முடியாதவன்.

சொற்பொருள் : மும்மலம் – மூன்று அழுக்குகள். அவையாவன: 1. ஆணவம், 2. கன்மம், 3. மாயை என்பன. ஏலுடைத்தாக – பொருத்தமுடையதாக.