பரிமா வின்மிசைப் பயின்ற வண்மையும்

மீண்டு வாரா வழியருள் புரிபவன்

பாண்டி நாடே பழம்பதி யாகவும்

பத்திசெய் அடியரைப் பரம்பரத் துய்ப்பவன்

உத்தர கோச மங்கைய ராகவும்

விளக்கவுரை : குதிரையின் மேல் அமர்ந்து வந்த தன்மையும், மீண்டும் பிறவி வராதிருக்கும் வழியைத் தன் அடியவர்களுக்கு அருளுபவனாகிய சிவபெருமான், பாண்டிய நாடே பழமையாய் தங்கும் ஊர் எனக் கொண்டும், தன் அடியார்களை மேலான வீடுபேற்றுக்குச் செலுத்துபவன். ‘திருவுத்தரக் கோசமங்கை’ என்னும் தலத்தைத் தன்னுடைய ஊராகவும்,
சொற்பொருள் : பரிமா - குதிரை. மிசை - மேலே. பழம்பதி - பழமையான ஊர். பரம்பரம் - மேலான சொர்க்கம். உய்ப்பவன் - செலுத்துபவன்.

ஆதிமூர்த்திகட் கருள்புரிந் தருளிய

தேவ தேவன் திருப்பெயராகவும்

இருள் கடிந் தருளிய இன்ப வூர்தி

அருளிய பெருமை அருண்மலை யாகவும்

எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும்

விளக்கவுரை : இந்திரன் உள்ளிட்ட ஆதிமூர்த்திகளுக்குத் திருவருள் காட்டி அருள்புரிந்தவன் சிவபெருமான். அதனால் ‘மகாதேவன்’ என்னும் அழகிய பெயரைத் தம் பெயராகக் கொண்டவன். மாயமாம் இருளைப் போக்கி எனக்கு அருள்புரிந்த பேரின்ப வாகனம். அருள் செய்த அந்தப் பெருமிதம் திருவருள்மலையாகவும், எவ்விதப் பெருந்தன்மையும், எவரெவர் திறத்தையும்,
சொற்பொருள் : தேவதேவன் - சிவபெருமான். இருள்கடிந்தருளிய - இருளைப் போக்கிய.

அப்பரி சதனால் ஆண்டுகொண் டருளி

நாயி னேனை நலமலி தில்லையுள்

கோல மார்தரு பொதுவினில் வருகென

ஏல என்னை ஈங்கொழித் தருளி

அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர்

விளக்கவுரை : அத்தன்மை அதனால் ஆட்கொண்டு அருளிய, நாய்போல் இழிந்த என்னை நலங்கள் நிறைந்த தில்லையில் இருக்கும் பொன்னம்பலத்திற்கு வருகவென்று, ஏற்றுக்கொள்ள என்னை இவ்விடத்திலேயே விட்டருள் செய்து, அன்றைய நாள் தன்னுடன் சென்ற திருவருள் பெற்ற அடியவர்தாம்.
சொற்பொருள் : நலமலி - நலங்கள் நிறைந்த. கோலமார் - அழகு நிறைந்த.

ஒன்ற ஒன்ற உடன்கலந் தருளியும்

எய்தவந் திலாதார் எரியிற் பாயவும்

மாலது வாகி மயக்க மெய்தியும்

பூதல மதனிற் புரண்டுவீழ்ந் தலறியும்

கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி

விளக்கவுரை : நன்கு பொருந்துமாறு அவருடன் இரண்டறக் கலந்து அருள் செய்தும், அருட்பேற்றை அடைய வாராத அடியவர் நெருப்பில் மூழ்கவும், ஆசையின் வாய்ப்பட்டு மயக்கமடைந்தும், நிலத்தின்மேல் விழுந்து புரண்டு வாய்விட்டு அலறியும், கால்களால் விரைந்து ஓடிச் சென்று கடலில் பாய்வதற்கு நெருங்கி.
சொற்பொருள் : ஒன்ற ஒன்ற - நன்கு பொருந்த. பூதலம் - பூமி. மண்டி - நெருங்கி.