நாத நாத என்றழு தரற்றிப்

பாத மெய்தினர் பாத மெய்தவும்

பதஞ்சலிக் கருளிய பரமநா டகவென்று

இதஞ்சலிப் பெய்தநின் றேங்கின ரேங்கவும்

எழில்பெறும் இமயத் தியன்புடை யம்பொன்

விளக்கவுரை : “இறைவ! இறைவ!” என்று அழுது, புலம்பி, திருவடி அடைந்தவர் திருவடி அடையவும், பதஞ்சலி முனிவருக்குப் பரமபதம் அளித்த சிறந்த கூத்தனே! என்று உள்ளம் சோர்வடைய நின்றபடி வருந்தினர். அவ்வாறு வருந்தவும், அழகான இமயமலையின் தன்மையுடைய அழகிய பொன்னாய்,
சொற்பொருள் : நாத - இறைவ! பாதம் - திருவடி. சலிப் பெய்த - சோர்வடைய. எழில் - அழகு.

பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம்நவில்

கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு

அருளிய திருமுகத் தழகுறு சிறுநகை

இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்

பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்

ஒலிதரு கைலை உயர்கிழ வோனே.

விளக்கவுரை : விளங்கும் தில்லையம்பதியில், ஆடல் புரிந்த, கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயினைக் கொண்ட உமாதேவியோடு காளி தேவிக்கும் திருவருள் புரிந்த திருமுகத்தில், அழகுபெறும் புன்னகை சிந்தும் சிவபெருமான், தன் திருவடிகளையே தஞ்சம் என நாடி வந்த அடியவருடன், ஒலிக்கின்ற உயர்ந்த கயிலைமலைக்கு உரியவன், விளங்குகின்ற ‘திருப்புலியூர்’ என்னும் திருத்தலத்தில் உள்ள கோயிலினுள் இனிதாக வீற்றிருந்து அருள் செய்கின்றான்.
சொற்பொருள் : பொலிதரு - விளங்குகின்ற. சிறுநகை - புன்னகை. கிழவோன் - உரியவன்.

திருவண்டப் பகுதி

சிவபெருமானின் தூல சூக்குமம் குறித்து வியந்தது

சிவபெருமான் அளவிடற்கரியவன். அதிநுட்பமானவன். அவனுடைய அரும்பெரும் சிறப்புகளை விவரிப்பதுதான் இப்பகுதி. இது 182 அடிகளைக் கொண்டது.

(ஆசிரியப்பா)

திருச்சிற்றம்பலம்

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

இன்னுழை கதிரின் துன்னணுப் புரையச்

விளக்கவுரை : பேரண்டம் என்பது ஐம்பெரும் பூதங்களின் கூட்டு. இதில் தோன்றி கோளங்கள் பல. அவை அறிவதற்கு அரியவை. வலிமை மிகுந்த தோற்றம் கொண்டவை. அவை ஒவ்வொன்றுக்கும் உள்ள அழகினைச் சொன்னால், 101 கோடிக்கும் மேலாக விரியும். பார்ப்போமானால், மேற்கூரையில் இருக்கும் சிறிய துளையின் வழியாக வீட்டுக்குள் புகும் சூரியக் கதிரில் காணப்படும் நுண்ணிய துகள்களை ஒப்பச்,
சொற்பொருள் : பகரின் - எடுத்துக் கூறினால். இன்னுழை - இல் + நுழை - வீட்டுக்குள் நுழைகின்ற. புரைய - போன்ற.