சிறிய வாகப் பெரியோன் தெரியின்

வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்

தோற்றமுஞ் சிறப்பும் ஈற்றொடு புணரிய

மாப்பே ரூழியும் நீக்கமும் நிலையும்

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து

விளக்கவுரை : சிறியவையாக இருக்கவும், தான் பெரியவனாக இருப்பவன். ஆராய்ந்தால், நான்முகன் பலருடன் திருமால் பலரின் தோற்றத்திற்கும், அவர்களுடைய பெருமைக்கும் இறுதிக்கும் காரணனாகி, அவருடன் தொடர்புடைய பேரூழிக் காலத்தின் அழிவிற்கும், பின்னர் உண்டாகும் நிலைத்த பொருள்களுக்கும் காரணமானவன் சிவபெருமான். இந்த அண்டத்து நுண்பொருள்களையும், பருப்பொருள்களையும் சூறைக்காற்று,
சொற்பொருள் : வேதியன் - நான்முகன். மாலவன் - திருமால். ஈற்றொடு - இறுதியாக. கறை மாருதம் - சூறைக்காற்று.

கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும்

படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை

காப்போன் காக்கும் கடவுள் காப்பவை

கரப்போன் கரப்பவை கருதாக்

விளக்கவுரை : அடியோடு பெயர்த்தெடுப்பது போல, எவராலும் அறிய முடியாத தனது சூக்கும வடிவினால் யாவற்றையும் முழுமையாக அழிக்க வல்ல மிகுந்த அழகினை உடையவன் சிவபெருமான். நான்முகன், திருமால் ஆகிய தெய்வங்களையும் காக்கும் தெய்வமாக இருப்பவன். காக்கும் பொருள்களை அழிப்பவன். அவ்வாறு தான் அழித்த பொருள்களை மீண்டும் தோற்றுவிக்க நினைக்காத,
சொற்பொருள் : குழகன் - சிவபெருமான். இளமையானவன் என்பது பொருள். கரப்போன் - ஒளிப்பவன்.

கருத்துடைக் கடவுள் திருத்தகும்

அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும்

வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி

கீடம் புரையுங் கிழவோன் நாள்தொறும்

அருக்கனின் சோதி அமைத்தோன் திருத்தகு

விளக்கவுரை : நல்ல எண்ணம் கொண்ட பரம்பொருள். அழகு பொருந்திய ஆறுவகையான சமயங்களுக்கும் வீடுபேறு வழங்கவல்ல நான்முகன், திருமால் உள்பட அனைத்துக் கடவுளரும் தன்னுடைய சிறப்புக்குமுன் சிறு புழுக்கள் என்று எண்ணத்தக்க மேன்மைக்குரியவன். நாள்தோறும் பகல் பொழுதை விளங்க வைக்கும் சூரியனின் பேரொளியைப் படைத்தவன். அழகான,
சொற்பொருள் : வீடுபேறு - முக்தி. கீடம் - சிறு புழு. அருக்கன் - சூரியன்.

மதியில் தண்மை வைத்தோன் திண்திறல்

தீயில் வெம்மை செய்தோன் பொய்தீர்

வானில் கலப்பு வைத்தோன் மேதகு

காலின் ஊக்கம் கண்டோன் நிழல் திகழ்

நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட

விளக்கவுரை : நிலவில் குளிர்ச்சியை வைத்தவன்; வலிமை வாய்ந்த தீயில் வெப்பத்தை வைத்தவன்; மெய்ம்மையான விண்ணில் இவையனைத்தையும் கலந்திருக்கச் செய்தவன்; காற்றில் வேகத்தையும், நிழல் விளங்கும் நீரில் இனிய சுவையையும் வைத்தவன். அனைவரும் அறியும்படி,