சொற்பொருள் : மதி - நிலவு. தண்மை - குளிர்ச்சி. திண்திறல் - பேராற்றல். வெம்மை - வெப்பம். கால் - காற்று. காலின்றி கடந்து செல்வது.

மண்ணில் திண்மை வைத்தோன் என்று என்று

எனைப் பல கோடி எனைப் பல பிறவும்

அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன் அஃதான்று

முன்னோன் காண்க முழுதோன் காண்க

தன்னேர் இல்லோன் தானே காண்க

விளக்கவுரை : படைத்த எண்ணற்ற பொருள்களைத் தாங்கும் வலிமையைப் பூமிக்குப் படைத்தவன். பல்வேறு பிறவிகளையும் அவ்வவற்றிற்குரிய இடங்களில் பொருத்தமாக வைத்தவன். அதுவுமல்லாமல், அவன் அநாதியானவன். அவனே முழுமுதலோன் என்பதையும் நீ காண்பாயாக! தனக்கு நிகர் தானே என்பவனாக இருப்பவன் சிவபெருமான் ஒருவனே என்பதையும் நீ காண்பாயாக!
சொற்பொருள் : திண்மை - வலிமை. தன்னேரில்லோன் - தனக்கு நிகராக வேறு எவரும் இல்லாத சிவபெருமான்.

ஏனம் தொல் எயிறு அணிந்தோன் காண்க

கானம் புலியுரி அரையோன் காண்க

நீற்றோன் காண்க நினைதொறும் நினைதொறும்

ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன்

இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க

விளக்கவுரை : வராகத்தின் முதிர்ந்த பற்களை அணிகலனாக அணிந்தவன் சிவபெருமான் என்பதை நீ காண்பாயாக. தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய புலியைக் கொன்று, அதன் தோலையுரித்து தன் ஆடையாக உடுத்திய இடையினை உடையவன் சிவபெருமான் என்பதை நீ காண்பாயாக. வெண்ணீறு அணிந்தவன் என்பதை நீ காண்பாயாக. நினைக்கும்பொழுது, நினைக்கும்பொழுது அவனுடைய பிரிவை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்பதை நீ காண்பாயாக. அவ்வாறு யான் அவனைப் பிரிந்தால் ஐயகோ நான் அழிவேன். அவன், இனிய இசைதரும் வீணையில் பொருந்தி இருப்பவன் என்பதையும் நீ காண்பாயாக.
சொற்பொருள் : ஏனம் - பன்றி. எயிறு - பல். கானம் - காடு. அரையோன் - இடுப்பையுடையவன்.

அன்னதொன் றவ்வயின் அறிந்தோன் காண்க

பரமன் காண்க பழையோன் காண்க

பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க

அற்புதன் காண்க அநேகன் காண்க

சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க

விளக்கவுரை : அத்தன்மை உடையதாகிய ஒன்றினை அவ்விடத்தில் அறிந்தவனை நீ காண்பாயாக! சிவபெருமான் எல்லாவற்றிற்கும் மேலான கடவுள், எல்லோருக்கும் முன்பேயுள்ள ஆதிப் பரம்பொருள் என்பதை நீ காண்பாயாக. நான்முகனும், திருமாலும் கூட காண்பதற்கரிய பெருமையுடையவன் சிவபெருமான் என்பதை நீ காண்பாயாக. அவன் அற்புதமானவன் என்பதையும், வடிவங்கள் பலவாக விளங்குபவன் என்பதையும், சொல்லின் எல்லை மீறிய பழமையானவன் என்பதையும் நீ காண்பாயாக.
சொற்பொருள் : பரமன் - மேலான கடவுள். தொல்லோன் - பழமையானவன்.