சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க
பத்தி வலையிற் படுவோன் காண்க
ஒருவன் என்னும் ஒருவன் காண்க
விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க
அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க
விளக்கவுரை :
சிவபெருமான் சென்றுணர முடியாத வெகுதொலைவில் இருப்பவன் என்பதை நீ காண்பாயாக.
அடியவர்களின் பத்தி என்னும் வலையில் சிக்கிக் கொள்பவன் என்பதை நீ காண்பாயாக.
ஒப்பிலாப் பரம்பொருள் அவன் ஒருவனே என்பதை நீ காண்பாயாக. அகன்ற அண்டம்
முழுவதுமாகப் பரவி நிறைந்தவன் என்பதை நீ காண்பாயாக. அணுவை விட மிகவும் நுட்பமான
தலைவன் அவன் என்பதையும் நீ காண்பாயாக.
சொற்பொருள் :
சேட்சியன் - வெகுதொலைவில் இருப்பவன். ஐயோன் - தலைவன்.
இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க
அரியதில் அரிய அரியோன் காண்க
மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க
நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க
மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க
விளக்கவுரை :
ஒப்பு நோக்கினால், அரிய பெருமையில் அவனே முதல்வன் என்பது தெரியும். இதனை நீ
காண்பாயாக. அரிய பொருள்களில் மிகவும் அரிய பொருளானவன் அவனே என்பதை நீ காண்பாயாக!
அவனே அனைத்துப் பொருள்களிலும் பொருந்தி நின்று, எப்பொருளையும் வளர்ப்பவன் என்பதை
நீ காண்பாயாக. கற்ற நூலறிவாலும் அறிய முடியாத நுட்பமானவன் அவன் என்பதையும் நீ
காண்பாயாக. விண்முதல் மண் ஈறாக எல்லா இடங்களிலும், எல்லாப் பொருள்களிலும்
பரவியிருப்பவன் அவனே என்பதையும் நீ காண்பாயாக.
சொற்பொருள் :
மருவி - பொருந்தி. விரிந்தோன் - பரவி நிற்பவன்.
அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
பந்தமும் வீடும் படைப்போன் காண்க
நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க
கற்பமும் இறுதியும் கண்டோன் காண்க
யாவரும் பெறவுறும் ஈசன் காண்க
விளக்கவுரை :
முடிவும் முதலும் ஆகிய இரண்டிலிருந்தும் நீங்கியவன் சிவபெருமான் என்பதை நீ காண்பாயாக.
வீடுபேறு மற்றும் பந்தபாசமாகிய பிறவிப் பேற்றையும் வகுப்பவன் என்பதை நீ காண்பாயாக.
அசையாப் பொருள் மற்றும் அசையும் பொருளாகவும் விளங்கி நிற்பவன் என்பதை நீ காண்பாயாக.
யுகங்களின் தோற்றங்களையும், அவற்றின் முடிவுகளையும் கண்டவன் என்பதை நீ காண்பாயாக.
அனைவரும் பெறும் வண்ணம் அருளை வழங்கும் தலைவன் என்பதை நீ காண்பாயாக.
சொற்பொருள் :
அந்தம் - முடிவு. ஆதி - முதல். வீடு - முத்தி. கற்பம் - யுகங்களின் தோற்றம்.
தேவரும் அறியாச் சிவனே காண்க
பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க
கண்ணால் யானுங் கண்டேன் காண்க
அருள்நனி சுரக்கும் அமுதே காண்க
கருணையின் பெருமை கண்டேன் காண்க.