வான்கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை

நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்தென்

ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.

– இராமலிங்க சுவாமிகள்

திருவாசகம் - சிவபுராணம்

1. சிவபுராணம்

(திருப்பெருந்துறையில் அருளியது)

திருச்சிற்றம்பலம்

சிவபெருமானின் பழைமை

இன்று ஆவுடையார் கோயில் என்பதுதான் அன்றைய திருப்பெருந்துறை. சிவபெருமான், இவ்வூரில் உள்ள குருந்தமர நீழலில்தான் மணிவாசகருக்கு மாணிக்கவாசகர் குரு வடிவில் காட்சி தந்து அருளினார். அதனால் பெருமகிழ்ச்சி கொண்ட மாணிக்கவாசகர், சிவபெருமானின் பெருஞ்சிறப்பை பக்தியோடு பாடினார். இது 'சிவபுராணம்' எனப்படும். இது 95 அடிகளைக் கொண்டது.

(கலிவெண்பா)

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க

விளக்கவுரை : 'நமசிவாய' எனும் மந்திரத்தை வணங்குகிறேன். சிவபெருமானின் திருவடிகளை வணங்குகிறேன். கண்ணிமைக்கும் நேரமும் எனது உள்ளத்திலிருந்து நீங்காதவனுடைய திருவடிகளை வணங்குகிறேன். திருக்கோகழி தலத்தை ஆட்சி செய்து அருளிய சிவகுருநாதனின் திருவடிகளை வணங்குகிறேன். சிவாகம நூற்பொருளாய் நின்று, அவ்வாகம நெறியைப் பின்பற்றும் அடியவரை அணுகி அருள்செய்பவனுடைய திருவடிகளை வணங்குகிறேன். தனக்குத்தானே ஒருவனாகவும், பலராகவும் விளங்குகின்ற சிவபெருமானின் திருவடிகளை வணங்குகிறேன்.
சொற்பொருள் : வாழ்க - வணங்குகிறேன். ஆகமம் - தெய்வநூல். தாள் - திருவடி. நாதன் - இறைவன். இங்கு சிவபெருமானைக் குறித்தது. இமைப்பொழுதும் - கண்ணிமைக்கும் நேரமும். கோகழி - திருக்கோகழி என்னும் திருத்தலம். ஏகன் - ஒருவன்.

வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க

கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க

சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க