விளக்கவுரை : பெரும்புகையோடு கூடிய கரைகளை அடைந்த வண்டுகளைக் கொண்ட குளத்தில், பெருகிட மேன்மேலும் இன்புறுதலைப் போல நோக்கம் கொண்டு, அருச்சனை என்னும் விளைநிலத்தில் ‘பத்தி’ என்னும் விதை விதைத்து அடியவர் ஆகிய உழவர் உண்டு பசியாறக் கொடுத்த ஞானப் பெருவெளியிலுள்ள அரிய பெரிய மேகம் போன்றவன் வாழ்க!
சொற்பொருள் : மாப்புகை - பெரும்புகை - உரிச்சொல் தொடர். அண்டம் - பெருவெளி. மேகன் - மேகம் போன்றவன்.

கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க

அருந்தவர்க் கருளும் ஆதி வாழ்க

அச்சந் தவிர்த்த சேவகன் வாழ்க

நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க

கூழிருந் துன்பந் துடைப்போன் வாழ்க

விளக்கவுரை : கரிய நிறப் படங்கொண்ட பாம்பாகிய அரைப் பட்டிகையை இடையில் அணிந்த இறைவன் வாழ்க. அரிய தவம் செய்யும் அடியவர்களுக்கு அருளும் பழமையோன் வாழ்க. பயம் தவிர்த்த சேவகன் வாழ்க. அன்றாடம் அன்பு செலுத்தும் அடியவரைத் தானே தன்னிடம் இழுத்து ஆள்பவன் வாழ்க! சூழும் துன்பங்களைத் துடைப்போன் வாழ்க.
சொற்பொருள் : கரும்பணம் - கரிய நிறப் படத்தினையுடைய பாம்பு. அச்சம் - பயம். நிச்சலும் - நாள்தோறும். துடைப்போன் - ஒழிப்போன்.

எய்தினர்க் காரமு தளிப்போன் வாழ்க

கூரிருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க

பேரமைத் தோளி காதலன் வாழ்க

ஏதிலர்க் கேதிலலம் இறைவன் வாழ்க

காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க

விளக்கவுரை : தன்னை வந்தடையும் அடியார்களுக்கு நிறைவாக அருள் என்னும் அமுதம் அளிப்பவன் வாழ்க. நள்ளிரவில், ஆனந்தத் தாண்டவம் என்னும் ஆடல் புரிபவன் வாழ்க! மூங்கில் போன்ற மென்மையான தோள்களைக் கொண்ட உமாதேவியாரின் அன்புக்குரியவன் வாழ்க. தன்னை வணங்காத அயலவர்களுக்குத் தானும் அயலவனாக விளங்கும் தலைவன் வாழ்க! தன் அடியார்களுக்கு வறுமைக் காலத்தில் உதவுகின்ற சேமிப்புத் தொகை போன்றவன் வாழ்க!
சொற்பொருள் : குனிப்போன் - நடனமிடுவோன். பேரமைத் தோளி - பெரிய மூங்கிலின் மென்மை போன்ற தோள்களைக் கொண்ட உமாதேவியார். ஏதிலர் - அயலவர். எய்ப்பு - வறுமை. வைப்பு - சேமிப்புத் தொகை.

நச்சர வாட்டிய நம்பன் போற்றி

பிச்சுசமை எற்றிய பெரியோன் போற்றி

நீற்றாடு தோற்ற வல்லோன் போற்றி

நாற்றிசை நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்

நிற்பன நிறீஇச்

விளக்கவுரை : விஷம் படைத்த பாம்பை ஆட்டிப் படைக்கும் இறைவனுக்கு வணக்கம். தன்மீது எனக்கு பித்து உண்டாக்கிய பெரியோனுக்கு வணக்கம். எப்பொழுதும் திருநீறு பூசிய தோற்றத்துடன் காட்சியளிப்பவனுக்கு வணக்கம். நான்கு திசைகளிலும் நடப்பனவற்றை நடக்கச் செய்தும், கிடப்பனவற்றைக் கிடக்கச் செய்தும், நிற்பனவற்றை நிற்கச் செய்தும்,
சொற்பொருள் : நச்சு - விஷம். அரவு - பாம்பு. நம்பன் - நம் இறைவன். பித்து - பித்து. நாற்றிசை - நான்கு திசை. நிறீஇ - நிற்கச் செய்து.