விளக்கவுரை : நச்சு - விஷம், அரவு - பாம்பு, நம்பன் - நம் இறைவன், பிச்சு - பித்து, நாற்றிசை - நான்கு திசை, நிறீஇ - நிற்கச்செய்து.

சொற்பதங் கடந்த தொல்லோன்

உள்ளத் துணர்ச்சியும் கொள்ளவும் படாஅன்

கண்முதற் புலனாற் காட்சியும் இல்லோன்

விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன்

பூவின் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும்

விளக்கவுரை : சொல்லால் அளப்பதற்கரிய பழமையானவன். அறிவினால், உள்ள உணர்வினால் அறிந்து கொள்ளவும் முடியாதவன். ஐம்புலன்களினாலும் அறிந்து கொள்ளப்படும் இயல்பும் அற்றவன். விண் முதலாகிய ஐம்பெரும் பூதங்களும் தன்னுடைய திருவருளால் தோன்றும்படி வகைப்படுத்தியவன். மலரில் இரண்டறக் கலந்திருக்கும் மணம்போல ஓங்கிய நிலையில் அனைத்துப் பொருள்களிலும் அனைத்து இடங்களிலும்,
சொற்பொருள் : தொல்லோன் - பழமையானவன். நாற்றம் - மணம்.

ஒழிவற நிறைந்து மேவிய பெருமை

இன்றெனக் கெளிவந் தருளி

அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள்

இன்றெனக் கெளிவந் திருந்தனன் போற்றி

அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி

விளக்கவுரை : அனைத்திலும் நீக்கமற நின்ற பருமை உடையவன். இப்பொழுது எனக்குக் குருநாதனாய் எளிதாக எழுந்தருளி அருள்புரிந்து, அழிவதற்குரிய இவ்வுடலை மீண்டும் தோன்றாமல் செய்தருளிய உயர் பொருளானவன். இப்பொழுது அடியவனாகிய எனக்கு எளிதில் வந்து அருள் செய்தான். அவனுக்கு வணக்கம். கருணை கனிந்தீடும் இவ்வுடலைப் படைத்தவனுக்கு வணக்கம்.
சொற்பொருள் : ஒழிவற - நீக்கமற. ஆக்கை - உடல்.

ஊற்றிருந் துள்ளம் களிப்போன் போற்றி

ஆற்றா இன்பம் அலர்ந்தவை செய்யப்

போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்

மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்

மின்னாளி கொண்ட பொன்னாளி திகழத்

விளக்கவுரை : தன்னை அன்பால் வணங்கும் அடியவர்களின் உள்ளங்களிலெல்லாம் ஊற்றாய் இருந்து, அவர்களுக்கெல்லாம் திருவருளைப் பொழிந்து, அதன்மூலம் உள்ளம் மகிழ்பவனுக்கு வணக்கம். பொறுக்க இயலாத பேரின்பக் கடலானது பெருகி, அலைகள் வீசவும் அப்போது பாதுகாவலைச் செய்யாத உடலை வீணே சுமப்பதைச் சரியன்று சொல்ல மாட்டேன். மரகதக் கல்லின் குவியலும், மாணிக்கக் கல்லின் பெருக்கமும், மின்னலின் ஒளியைக் கொண்ட பொன்னின் ஒளியும் திகழ,
சொற்பொருள் : களிப்போன் - உள்ளம் மகிழ்பவன். ஆக்கை - உடல். குவாஅல் - குவியல்.

திசைமுகம் சென்று தேடினர்க் கொளித்தும்

முறையுளி ஒற்றி முயன்றவர்க் கொளித்தும்

ஒற்றுமை கொண்டு நோக்கு முள்ளத்

துற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும்

மறைத்திறம் நோக்கி வருந்தினர்க் கொளித்தும்