விளக்கவுரை : நான்கு திசைகளிலும் சென்று தேடியவர்க்கு மறைந்தும், முறையாக வணங்கி முயன்றவர்க்கு மறைந்தும், மனக்கண்ணால் உற்றுநோக்கும் உள்ளம் கொண்டவராய், கேட்டவர் தம்முடைய உள்ளம் வருந்துமாறு கடுமையாகப் பேசியவர்க்கு மறைந்தும், மறைகளின் ஆழ்பொருளை உற்றுநோக்கி ஆராய்ந்தும் உணர முடியாமல் உள்ளம் வருந்தியவர்களுக்கு மறைந்தும்,
சொற்பொருள் : மறை - வேதம்
இத்தந் திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்கு
அத்தந் திரத்தின் அவ்வயின் ஒளித்தும்
முனிவு அற நோக்கி நனிவரக் கௌவி
ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து
வாள்நுதல் பெண்ணென ஒளித்துச் சேண்வயின்
விளக்கவுரை : இந்த உபாயத்தைக் கொண்டு அவனைக் காணலாம் என்று எண்ணி இருந்தவர்களுக்கு, அந்த உபாயத்தினாலேயே அவர் நினைத்திருந்த இடத்திலேயே மறைந்தும், கோபம் நீங்குமாறு பார்த்து, மிகவும் வருவதற்குப் பற்றி, ஆண் என்று சொல்லுமாறு விளங்கி, அலி என்று சொல்லுமாறு இடம் நகர்ந்து, ஒளி விளங்கும் நெற்றியைக் கொண்ட பெண் என்று சொல்லுமாறு மறைந்தும் தொலைவில்,
சொற்பொருள் : தந்திர் - உபாயம். முனிவு - கோபம். வாள்நுதல் பெண் - ஒளி பொருந்திய நெற்றியுடைய பெண்.
ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த்
துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை
அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்
ஒன்றுண் டில்லை யென்றறி வொளித்தும்
பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும்
விளக்கவுரை : ஐம்புலன்களையும் செல்ல விடுத்து, அரிய மலைகளுக்கெல்லாம் சென்று, உணவு துறந்தபடியால் வெறும் உயிரையும் உடலையும் உடைய அருமை வாய்ந்த தவ முனிவர்களின் உள்ளுணர்வில் திருத்தமாக மறைந்தும், ஒரு பொருள் உண்டென்றும், இல்லையென்றும் சொல்லுகிற அறிவுக்கு மறைந்தும், முன்னைப் பழங்கால முதலாகப் பழகுந்தோறும், பின்னை இப்பொழுது பழகும்போதும்,
சொற்பொருள் : வரை - மலை. துற்று - உணவு. ஆக்கை - உடல்.
ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்
ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில்
தாள்தனை இடுமின் சுற்றுமின் சூழ்மின்
தொடர்மின் விடேன்மின்
பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும்
விளக்கவுரை : மறைந்து கொள்ளும் தன்மையுடைய கள்ளனைக் கண்டோம். ஒலி எழுப்புங்கள்; ஒலி எழுப்புங்கள். அன்றைக்கே மலர்ந்த மலர்களைப் பறித்து, அவற்றை மாலையாக்கி, அந்த மாலையைக் கொண்டு அவனுடைய திருவடிகளைக் கட்டிப் போடுங்கள். அவனைச் சுற்றிக் கொள்ளுங்கள்; சூழ்ந்து கொள்ளுங்கள்; அவனைத் தொடர்ந்து பின் செல்லுங்கள்; விடாமல் அவனை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்பவர்களுடைய முயற்சிக்கும் எட்டாமல் தன்னை முழுவதுமான மறைத்தும்,
சொற்பொருள் : சோரன் - கள்ளன். ஆர்மின் - ஒலி எழுப்புங்கள். நாண்மலர் - நாள்+மலர் - அன்றைக்கு மலர்ந்த மலர். பிணையல் - மாலை. தாள் - திருவடி.