தன்னே ரில்லோன் தானேயான தன்மை

என்னே ரனையோர் கேட்க வந்தியம்பி

அறைகூவி ஆட்கொண் டருளி

மறையோர் கோலங் காட்டி யருளாலும்

உலையா அன்பென் புருக வோலமிட்டு

விளக்கவுரை : தனக்கு நிகரானவர் என்று வேறு எவரும் இல்லாதவன். அவ்வாறு இருந்தமையை என் போன்றவர் கேட்டுமாறு வந்து கூறி, ஓங்கிக் குரல் கொடுத்து அழைத்துத் தனக்கு அடிமை செய்து, வேதம் ஓதுவதில் வல்லவரான அந்தணர் கோலத்தைக் காட்டி அருள் செய்தலும், உள்ளம் வருந்தி ஆழ்ந்த அன்பினால் எலும்பும் உருகச் சத்தம் எழுப்பி,
சொற்பொருள் : என்னேரனையோர் - என் போன்றோர். அறைகூவி - ஓங்கிக் குரல் கொடுத்து. என்பு - எலும்பு. ஓலமிட்டு - சத்தம் எழுப்பி.

அலைகடற் றிரையின் ஆர்த்தார்த் தோங்கித்

தலைதடூ மாறா வீழ்ந்துபுரண் டலறிப்

பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து

நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவும்

கடக்களி றேற்றாத் தடப்பெரு மதத்தின்

விளக்கவுரை : அலையும் கடல் அலைகளைப் போல சத்தம் எழுப்பி உயர்ந்தெழுந்து, தலைதடுமாறித் தரையில் விழுந்து புரண்டு கூக்குரலிட்டு, பித்தரைப் போல மயங்கி, உன்மத்தங் கொண்டவரைப் போல மதித்து, நாட்டு மக்கள் மயங்கவும், கேட்டவர் வியக்கவும் மதநீர் சொரிகின்ற ஆண்யானைகள் தாங்கப் பெறா மிகப் பெரிய மதத்தனால்,
சொற்பொருள் : திரை - அலை. ஆர்த்து - சத்தம் எழுப்பி. மருள - மயங்க. கடக்களிறு - மதயானை.

ஆற்றே னாக அவயவம் சுவைதரு

கோற்றேன் கொண்டு செய்தனன்

ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின்

வீழ்வித் தாங்கு அன்று

அருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில்

விளக்கவுரை : யான் பொறுத்துக் கொள்ளாதவனாக, இனிய சுவையுடைய கொம்புத்தேனைக் கொண்டு, உடலுறுப்புகளை சுவை பெறச் செய்தான். தன் பகைவருடைய பழைமை வாய்ந்த ஊரைத் தம்முடைய அழகான சிறப்பு என்னும் தீயால் அழிந்து விழச் செய்தது போலவே, அந்நாளில் அருமை வாய்ந்த திருவருள் என்னும் பெரு நெருப்பினால், அவனுடைய அடிமைகளாகிய அவன் அடிமைக் குடிகளில்,
சொற்பொருள் : ஆற்றேன் - பொறுத்துக் கொள்ள மாட்டேன். கோல்தேன் - கொம்புத் தேன். எழில்நகை - அழகான புன்னகை. எரி - நெருப்பு.

ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்

தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்

சொல்லுவது அறியேன் வாழி முறையோ

தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது

தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு