விளக்கவுரை : ஒருவன் கூட தவறாமல் தன்னிடம் ஒட்டிக் கொண்டான். அக்கன் வயலில் இருக்கும் நெல்லிக்கனி போல, அடியவனுக்கு அவன் இருந்து விட்டான். அந்த நிலையைக் கூற எனக்குத் தெரியாது. அவ்வாறு வாழ்தல் முறையாகுமோ? இனியும் நான் உயிர் வாழேன். நாய் போன்ற எனக்கு அவன் செய்த அருளின்திறம் என்னவென்று அறியேன். ஐயகோ! இறந்துவிட்டேன். எனக்கு,
சொற்பொருள் : வாழாமை - தவறாமல். தடக்கை - பெரிய கை.

அருளிய தறியேன் பருகியும் ஆரேன்

விழுங்கியும் ஒல்ல கில்லேன்

செழுந்தண் பாற்கடல் திரைபுரைவித்து

உவாக்கடல் நள்ளுநீர் உள்ளகந் ததும்ப

வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும்

விளக்கவுரை : இறைவன் அருள்செய்த தன்மையை அறியேன். அந்தச் சுவையமுதை நான் உண்ட பின்னும் நான் நிறைவடையவில்லை. விழுங்கிய பின்னரும் யான் அமைதியடையவில்லை. குளிர்ந்த திருப்பாற்கடலின் நீரலைகளை ஒப்பாக்கி நிறைநிலா தோன்றுகிற முழுநிலா நாளில், கடலில் காணும் நீரினைப் போல, உள்ளத்தில் பொங்கிப் பெருகுமாறு சொல்லற்கரிய அருளமுதத்தை மயிர்க்கால் தோறும்,
சொற்பொருள் : ஆரேன் - நிறைவுபடையேன். ஒல்லகில்லேன் - அமைதியடையேன். திரை - அலை.

தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை

குரம்பைதோறும் நாயுட லகத்தே

குரம்பைகொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய

அற்புதமான அமுத தாரைகள்

எற்புத்துளைதொறும் ஏற்றினன் உருகுவது

விளக்கவுரை : அனைத்தையும் விட, இம்மையில் இப்போது நாயேனாகிய அடியேனது இவ்வுடலில், சிறு குடிசையாகக் கொண்டு நறுந்தேனைப் பாய வைத்து, நிறைவு பெற்ற புதுமையான அமுத தாரைகளை, எலும்புகளின் துளைகளிலெல்லாம் பரவுமாறு ஏற்றினான். உருக்கமுடையதாகிய,
சொற்பொருள் : ஊன்தழை - உடலாகிய பிண்டம். குரம்பை - உடல். எற்பு - என்பு - எலும்பு.

உள்ளங் கொண்டோர் உருச்செய் தாங்கெனக்

கள்ளூ றாக்கை அமைத்தனன் ஒள்ளிய

கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை

என்னையும் இருப்ப தாக்கினன் என்னிற்

கருணை வான்தேன் கலக்க

அருளொடு பராவமு தாக்கினன்

பிரமன்மா லறியாப் பெற்றியோனே.

விளக்கவுரை : உள்ளத்தைக் கொண்டு, ஒரு வடிவம் செய்வது போல, எனக்கு நிறைவாக உருகக்கூடிய உடலை உருவாக்கினன். ஒளியான கரும்பு மற்றும் விளாங்கனியை நாடிச் செல்கின்ற மதங்கொண்ட ஆண் யானையைப் போன்று.