வாழ்வின் இறுதியில் என்னையும் அவ்வாறு இறுமாந்திருப்பவனாகப் படைத்தான். இறுதியில், என்னிடம் அருளாகிய உயிர்த்தேன் எங்கும் பாயுமாறு அன்புடன் கூடிய அமுதமாக்கினான். படைப்புக் கடவுளாகிய நான்முகனும், காத்தல் கடவுளாகிய திருமாலும் தேடியும் காணாத - தேர்ந்தும் தெளியாத பெருமிதம் கொண்ட பரம்பொருளாகிய சிவபெருமானே!
சொற்பொருள் : உரு - வடிவம். ஆக்கை - உடல். ஒள்ளிய - ஒளி பொருந்திய. கன்னல் - கரும்பு. களிறு - யானை. பிரமன் - நான்முகன். மால் - திருமால். பெற்றியோன் - பெருமிதமுடையவன்.
போற்றித் திருவகவல்
தில்லையில் பாடியது
இவ்வுலகத் தோற்றம்
விளக்கவுரை : சிவபெருமானின் பெருமைகள் பலபட இதில் கூறப்படுவதால் இதற்கு 'போற்றித் திருவகவல்' என்று பெயர். பல அடிகள் உள்ள இப்பாடலில் சில அடிகள் மட்டுமே உலகத் தோற்றம் பற்றிக் கூறுகின்றன. எனினும், சிறப்புத் தன்மையைக் கருதி இத்தலைப்பு இடம் பெற்றது. இப்பாடல், 225 அடிகளைக் கொண்டதாகும்.
திருச்சிற்றம்பலம்
நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
ஈரடியாலே மூவுல களந்து
நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்று
அடிமுடி யறியும் ஆதர வதனிற்
விளக்கவுரை : நான்முகன் முதற்கொண்டு விண்ணவராகிய தேவர் அனைவரும் வணங்கி நிற்க, தம்முடைய இரண்டு திருவடிகளால் விண்ணுலகம், மண்ணுலகம், பாதாளம் என்னும் மூன்று உலகங்களையும் அளந்து, நான்கு திசைகளிலும் உள்ள முனிவர்களும் தம்முடைய ஐம்புலன்களும் மகிழும்படி வணங்குகின்ற ஒளிவீசும் திருமுடி கொண்ட காக்கும் கடவுளான திருமால், முன்பொரு காலத்தில் உன்னுடைய திருவடியின் ஆழத்தையும், திருமுடியின் உயரத்தையும் அறிய வேண்டும் என்னும் ஆவலில்,
சொற்பொருள் : நான்முகன் - பிரமன். வானவர் - தேவர். நாற்றிசை - நான்கு திசை. மால் - திருமால்.
கடுமுரண் ஏன மாகி முன்கலந்து
ஏழ்தலம் உருவ இடந்து பின்னெய்த்து
ஊழி முதல்வ சயசய வென்று
வழுத்தியும் காணா மலரடி யிணைகள்
வழுத்துதற் கெளிதாய் வார்கடல் உலகினில்
விளக்கவுரை : மிகுந்த வேகத்தையும், வலிமையையும் கொண்ட பன்றியாக உருவெடுத்து, முன்னேறி ஏழு உலகங்களும் ஊடுருவுமாறு பூமியைத் தோண்டிச் சென்று, பின்னர் இளைத்து, உலகத் தோற்றத்திற்கு முன்னவனே! நீ வெல்க! என்றபடி வணங்கியும் காணமுடியாத தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டும், எம்மைப்போன்ற அடியவர் வணங்குவதற்கு எளிமையுடையவனாகிப் பெருங்கடல்களால் சூழப்பட்ட இந்தப் பூமியில்,
சொற்பொருள் : ஏனம் - பன்றி. ஏழ்தலம் - ஏழு உலகங்கள். சயசயவென்று - வெல்க வெல்க என்று. வழுத்தி - வணங்கி. மலரடி - மலர் போன்ற மென்மையான திருவடி. உவமைத் தொகை.