யானை முதலா எறும்பீறாய

ஊனமில் யோனியினுள்வினை பிழைத்தும்

மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து

ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்

ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்

விளக்கவுரை : யானை முதலாக எறும்பு இறுதியாக உள்ள ஊனம் என்பது இல்லா எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களில், யான் செய்த வினைகளுக்கு ஏற்பத் தங்கியிருந்து அவற்றிலிருந்து தப்பியும், இந்த மனிதப் பிறவியில் தாய் வயிற்றில் இருந்தபோதும், குறைவில்லாப் பூச்சி புழுக்களின் போரிலிருந்து தப்பியும், கருவான ஒரு மாதத்திலேயே தான்றிக்காய் அளவாக இருந்த நான் இரண்டாகப் பிளந்து உருவம் சிதையாமல் தப்பியும்,
சொற்பொருள் : ஊனம் - குறை. மாதா உதரம் - தாயின் வயிறு. இருமை - இரண்டு.

இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்

மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்

ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்

அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்

ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும்

விளக்கவுரை : இரண்டாவது மாதத்தில் நிகமும் ஒருமைப்பாட்டில் தப்பியும், மூன்றாவது மாதத்தில் தோன்றும் மதப் பெருக்குக்குத் தப்பியும், நான்காவது மாதத்தில் பேரிருளுக்குத் தப்பியும், ஐந்தாவது மாதத்தில் இறப்பிலிருந்து தப்பியும், ஆறாவது மாதத்தில் உண்டாகும் பெருந்துன்பத்துக்கும், பெரும்பழிக்கும் தப்பியும்,
சொற்பொருள் : பிழைத்தும் - தப்பியும். ஈரிரு திங்கள் - நான்காவது மாதம். முஞ்சுதல் - இறத்தல். ஊறலர் - பெருந்துன்பம், பெரும்பழி.

ஏழுதிங்களில் தாழ்புவி பிழைத்தும்

எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்

ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்

தக்க தசமதி தாயொடு தான்படும்

துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்

விளக்கவுரை : ஏழாவது மாதத்தில் தாழ்ந்த உலகுக்குத் தப்பியும், எட்டாவது மாதத்தில் பெருமுயற்சியில் தப்பியும், ஒன்பதாவது மாதத்தில் துன்பத்திற்குத் தப்பியும், பத்தாவது மாதத்தில் தாயுடன் தான் படுகின்ற துன்பக் கடலில் மூழ்குகின்ற துயரங்களிடையே தப்பியும்,
சொற்பொருள் : தாழ்புவி - தாழ்ந்த உலகம். தசமதி - பத்தாவது மாதம். துக்கசாகரம் - துன்பக்கடல்.

ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை

ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்

காலை மலமொடு கடும்பகற் பசிநிசி

வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்

கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில்

விளக்கவுரை : ஒவ்வோராண்டும் வளர்ந்து வந்த அந்தச் சமயங்களில் எல்லாம் நெருக்கியும் அமர்த்தியும் என்றவாறு பலப்பல துன்பங்களிலிருந்து தப்பியும், காலையில் பசியெடுக்கும் போதும், இரவுப் பொழுதின் உறக்கத்திலும், அங்குமிங்குமாகச் சென்று வருவதிலும் உண்டாகின்ற துன்பங்கள் யாவற்றிலிருந்தும் தப்பியும், கரிய கூந்தலையும், சிவந்த வாயையும், வெண்ணிறப் பற்களையும் உடைய - கார்காலம் வரக்கண்டு மகிழும் மயிலானது,