சொற்பொருள் : நிசி - இரவுப்பொழுது. நித்திரை - உறக்கம்.

ஒருங்கிய சாயல் நெருங்கியுள் மதர்த்துக்

கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்து

எய்த்திடை வருந்த எழுந்து புடைபரந்து

ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்தம்

கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும்

விளக்கவுரை : ஒரு பக்கமாக ஒதுங்கியதான தோற்றத்தையும், இடைவளி இன்றி செறிந்து உள்ளிடம் கனத்து, கச்சையின் நூற்கயிறு அறும்படி நிமிர்ந்தனவாகி, ஒளி பொருந்தி, முன்னே பருத்து, இடையானது மலிந்து வருந்துமாறு புடைத்தெழுந்து, பக்கங்களில் பரவி, ஈர்க்கிடையில் போகா இளமையான கொங்கைகளை உடைய மகளிரின் கூர்மையான கண்கள் என்னும் கொள்ளையிலிருந்து தப்பியும்,
சொற்பொருள் : மதர்த்து - செறிந்து. கச்சு - மார்புச்சட்டை. பணைத்து - பருத்து. கூர்த்த நயனம் - கூர்மையான கண்கள்.

பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுள்

மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும்

கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்

செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும்

நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும்

விளக்கவுரை : பித்த உலகர் பெருந்துறைப் பரப்பினுள், மதம் பிடித்த ஆண் யானை எனப்படும் பேராசைக்குத் தப்பியும், பல கலைகளையும் உள்ளடக்கிய கல்வி எனப்படும் பல கடல்களிலிருந்து தப்பித்தும், பொருட்செல்வம் எனப்படும் துயரத்திலிருந்து தப்பித்தும், வறுமை எனப்படும் பழமை வாய்ந்த கொடுமையான விஷத்திலிருந்து தப்பித்தும்,
சொற்பொருள் : களிறு - ஆண்யானை. அவா - பேராசை. அல்லல் - துன்பம். நல்குரவு - வறுமை. விடம் - விஷம்.

புல்வரம் பாய பலதுறை பிழைத்தும்

தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி

முனிவி லாததோர் பொருளது கருதலும்

ஆறு கோடி மாயா சத்திகள்

வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின

விளக்கவுரை : கீழான ஒழுகலாறுகளை உடைய பல துறைகளிலிருந்து தப்பித்தும், பிறகு தெய்வம் உண்டு என்பதாகிய ஒரு நினைவு தோன்றி, வெறுப்பென்பது இல்லாததாகிய ஒரு பொருளை எண்ணுதலும் அந்தச் சமயத்தில், ஆறு கோடி அளவிலான மாயா சக்திகள் வெவ்வேறு வகைகளில் உள்ள தம்முடைய மாயங்களைக் காட்டத் தொடங்கின.
சொற்பொருள் : புல்வரம் பாய - பல பரந்துபட்ட துறைகள். முனிவிலாத - வெறுப்பிலாத.

ஆத்த மானார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்

சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள்

பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும்

விரத மேபர மாகவே தியரும்

விளக்கவுரை : நம்பிக்கையுடன் நட்பாக இருந்தவர்களும், அயலவர்களும் ஒன்றுகூடி இறைவன் இல்லை என்னும் இறைமறுப்புக் கொள்கை பேசித் தங்கள் நாவினில் வடு உண்டாகப் பெற்றனர்.