விளக்கவுரை :
ஆணவ வேகத்தை முழுவதுமாக ஒழித்து, என்னை ஆட்கொண்ட அரசனின் இணையடிகள்
வெல்வதாகுக! பிறப்பைப் போக்கும் சிவபெருமானின் சிலம்பணிந்த திருவடிகள் வெல்வதாகுக!
தன்னிடம் அன்பில்லாதவராயும், தன்னை நெருங்காதவராயும் இருப்பவர்க்குத் தொலைவில்
இருப்பவனுடைய மென்மையான மலரடிகள் வெல்வதாகுக! தம் இரண்டு கைகளையும் குவித்துத்
தன்னை வணங்கும் அடியவர்களின் அன்பு கண்டு, உள்ளம் மகிழ்கின்ற தலைவனுடைய திருவடிகள்
வெல்வதாகுக!
சிரம் மேல் கைகுவித்து வணங்கும் அடியவரை உயர்வடையச் செய்யும் பெருமை கொண்டவனுடைய
திருவடிகள் வெல்வதாகுக.
சொற்பொருள் :
வேந்தன் - அரசன், இங்கு சிவபெருமானைக் குறித்தது. பிஞ்ஞகன் - தலையழகு கொண்ட
சிவபெருமான். சிவபெருமான் கொன்றை மலரை அணிந்தவன். பிறையையும், கங்கையையும்
தலையில் தரித்தவன். சேயோன் - தொலைவில் இருப்பவன். இங்கு சிவபெருமானைக் குறித்தது.
சிரம் - தலை. சீர் - பெருமை. கழல் - திருவடி.
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
தேசனடி போற்றி சிவன்சே வடி போற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி
சீரார் பெருந்துறையெம் தேவனடி போற்றி
விளக்கவுரை :
யாவர்க்கும் முதல்வனாகிய சிவபெருமானின் திருவடிகளுக்கு வணக்கம். எமக்குத்
தந்தையாக விளங்குபவனுடைய திருவடிகளுக்கு வணக்கம். ஒளிவடிவில் திகழும் இறைவன்
திருவடிகளுக்கு வணக்கம். சிவபெருமானின் சிவந்த திருவடிகளுக்கு வணக்கம்.
தம்மை வணங்கும் அடியவர்களின் அன்பில் நிலைபெற்று விளங்கும் தூயவனின் திருவடிகளுக்கு
வணக்கம். மாயமாகிய பிறப்பை அறுக்கும் மன்னவனுடைய திருவடிகளுக்கு வணக்கம்.
பெருமை பொருந்திய திருப்பெருந்துறை என்னும் திருத்தலத்தில் விளங்கும் நம்முடைய
தெய்வத்தின் திருவடிகளுக்கு வணக்கம்.
சொற்பொருள் :
ஈசன் - இறைவன். இங்கு சிவபெருமானைக் குறித்தது. எந்தை - என் தந்தை.
சேவடி - செம்மையான திருவடி. நிமலன் - தூயவனாகிய இறைவன்.
சீர் - பெருமை. பெருந்துறை - திருப்பெருந்துறை என்னும் சிவத்தலம்.
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்
விளக்கவுரை :
தெவிட்டாத பேரின்பத்தைத் தம்முடைய அடியவர்க்கு அருளும் மலை போன்றவனுக்கு
வணக்கம். சிவபெருமான் என்னுடைய எண்ணத்தில் என்றும் நிலை பெற்றவன் என்பதால்,
சிவபெருமானின் திருவருளாலே அவனுடைய திருவடிகளைப் பணிந்து, அவனுடைய உள்ளம்
மகிழ்ச்சி அடைவதற்காக, ‘சிவபுராணம்’ என்னும் சிவபெருமானின் பழைய வரலாற்றை,
நான் முன்பு செய்த வினைகள் யாவும் என்னை விட்டு விலகுமாறு நான் கூறுவேன்.
சொற்பொருள் :
ஆராத - தெவிட்டாத. முந்தை - இதற்குமுன் உள்ள பிறவி.
உரைப்பன் - கூறுவேன்.