கசிவது பெருகிக் கடலென மறுகி

அகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச்

சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப

நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை

பூணது வாகக் கோணுத லின்றிச்

விளக்கவுரை : உள்ளத்தின் உருக்கமானது பெருகிக் கடல்போல் மயக்குற்று, மனமானது நெகிழ, அதற்குப் பொருந்துமாறு உடலானது நடுங்கி, இவ்வுலக மக்கள் பேய் போன்றவன் என்று தம்மைக் கண்டு சிரிக்குமாறு வெட்கமானது விலகி, நாட்டுமக்கள் இழித்துக் கூறும் சொற்களை அணிகலனாகக் கொண்டு உள்ளம் கோணாமல்,
சொற்பொருள் : மறுகி - மயக்குற்று. அகம் - மனம். குழைத்து - நெகிழ்ந்து. மெய்விதிர்த்து - உடல்நடுங்கி. சகம் - உலகம். இங்கு இடவாகு பெயராய் உலக மக்களைக் குறித்தது. கோணுதல் - வளைதல்.

சதுரிழந் தறிமால் கொண்டு சாரும்

கதியது பரமா அதிசய மாகக்

கற்றா மனமெனக் கதறியும் பதறியும்

மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது

அருபரத் தொருவன் அவனியில் வந்து

விளக்கவுரை : வலிமையை இழந்தபடி அறியத்தக்கதென மயக்கத்தை அடைந்து, சென்று சேர்வதான வீடுபேற்றையே மிகவுயர்வான வியப்பாகக் கொண்டு, கன்றை உடைய தாய்ப்பசுவின் மனம்போல ஓங்கிக் குரலெடுத்துக் கூவியும், உடல்நடுங்கியும் சிவபெருமானைத் தவிர்த்து மற்ற எந்த ஒரு கடவுளையும் கனவிலும் நினைக்காமல், அரும்பெரும் கடவுள் தன்மை கொண்ட ஒப்பிலாச் சிவன் இவ்வுலகில் எழுந்தருளி வந்து,
சொற்பொருள் : கதி - வீடுபேறு. கற்றா - கன்று + ஆ - கன்றும் தாய்ப்பசுவும். அவனி - உலகம்.

குருபரனாகி அருளிய பெருமையைச்

சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப்

பிறிவினை யறியா நிழலது போல

முன்பின் னாகி முனியா தத்திசை

என்பு நைந்து உருகி நெக்குநெக் கேங்கி

விளக்கவுரை : குருவாகி உறுதிப்பொருள் வழங்கிய சிறப்பினை சிறுமைத்தனம் என்று இகழ்ந்து கூறாமல், அவனுடைய இரண்டு திருவடிகளை விட்டு நீங்குதல் அறியாத நிழல் போல, முன்னும் பின்னுமாய் விளங்கிக் கோபமடையாமல், குருமணியாய் விளங்கி அருள் தந்தபோது, உடலின் எலும்பானது உருகி, உள்ளம் இரங்கி,
சொற்பொருள் : குருபரன் - குரு. முனியாது - கோபப்படாமல். என்பு - எலும்பு. நைந்துருகி - இளகும்படி உருகி.

அன்பெனும் ஆறு கரையது புரள

நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி

உரைதடு மாறி உரோமஞ் சிலிர்ப்பக்

கரமலர் மொட்டித் திருதயம் மலரக்

விளக்கவுரை : அன்பு எனப்படும் ஆறானது கரை புரண்டு வர, நலம் செய்யும் ஐம்புலன்கள் ஒன்றுபட்டு, “தலைவனே!” என்று வாயூறிச் சொற்கள் தடுமாற்றமடைந்து, மயிர்கள் சிலிர்த்திட, கைகள் என்னும்