மலர்களை மொட்டு போலக் குவித்து, உள்ளமானது மகிழ்ச்சியால் விரிய, கண்கள் களிப்பெய்த, நுண்ணிய துளிகள் என அவை ஆனந்தக் கண்ணீர் சிந்த,
சொற்பொருள் : நாதன் - இறைவன், தலைவன். உரோமம் - முடி. கரமலர் - மலர் என்னும் கை. உருவகம்.
கண்களி கூர நுண்துளி அரும்பச்
சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
தாயே யாகி வளர்த்தனை போற்றி
மெய்தரு வேதிய னாகி வினைகெடக்
கைதர வல்ல கடவுள் போற்றி
விளக்கவுரை : கண்கள் களிப்பெய்தி, நுண்ணிய துளிகள் என அவை ஆனந்தக் கண்ணீர் சிந்த, தளராத உள்ளத்து அன்பை நாள்தோறும் பெருகச் செய்யும் உன்னுடைய அடியவர்களுக்குக் கருணை புரியும் தாயாகி அவரை வளர்த்தாய் - உனக்கு வணக்கம். மெய்ப்பொருளை வழங்கியருளும் அந்தணனாகி, என்னுடைய நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் அழியுமாறு கைகொடுத்து உதவவல்ல கடவுளானாய் - உனக்கு வணக்கம்.
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக் காரமு தானாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி
விளக்கவுரை : பொன்னென விளங்கும் மாநகர் மதுரைக்கு மன்னனாகிய சொக்கநாதப் பெருமானே! உனக்கு வணக்கம். மதுரை மாநகரில் விளங்குகின்ற ஒளி விளங்கும் மாணிக்க மணியே வணக்கம். அழகிய தில்லையம்பதியில் விளங்குகின்ற பொன்னம்பலத்தில் ஆடல்புரியும் இறைவனே வணக்கம். இன்று எனக்கு அமுதாகிய அமுதனே வணக்கம். அழிவிலா நான்கு மறைகளைத் தோற்றுவித்த நான்மறைத் தலைவா! வணக்கம்.
சொற்பொருள் : சாயா அன்பு - தளராத அன்பு. நாடொறும் - நாள் + தொறும், தினந்தோறும். வேதியன் - அந்தணன். ஆடகம் - பொன். கூடல் - மதுரை. மன்று - பொன்னம்பலம். மூவா - அழிவிலா.
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
மின்னார் உருவ விகிர்தா போற்றி
கல்நார் உரித்த கனியே போற்றி
காவாய் கனகக் குன்றே போற்றி
ஆஆ என்றனக் கருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி
விளக்கவுரை : காளை உருக்கொண்ட வெல்லும் கொடிக்குரிய சிவபெருமானே! வணக்கம். ஒளி பொருந்திய வடிவுடைய வேறுபாட்டைக் கொண்டவனே! வணக்கம். கருங்கல்லில் நார் உரித்த கனியாக விளங்குபவனே! வணக்கம். என்னைக் காத்தருள்வாய் பொன்மலை போன்றவனே! “ஆவா” என்று என்மீது பேரன்பு கொண்டு அருள்புரிவாய்! வணக்கம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றுபவனே! வணக்கம்.
சொற்பொருள் : மின்னார் உருவன் - ஒளி பொருந்திய வடிவமுடைய சிவபெருமான். விகிர்தன் - வேறுபாடு கொண்டவன். கனகம் - பொன்.