இடரைக் களையும் எந்தாய் போற்றி

ஈச போற்றி இறைவ போற்றி

தேசப் பளிங்கின் திரளே போற்றி

அரைசே போற்றி அமுதே போற்றி

விரைசேர் சரண விகிர்தா போற்றி

விளக்கவுரை : துயரத்தைப் போக்குகின்ற எங்கள் தந்தையே! வணக்கம். முன்னைப் பரம்பொருளே, மூத்தவனே! வணக்கம். ஒளியுடைய பளிங்கின் தொகுப்பே! வணக்கம். மன்னவனே! வணக்கம். இனிக்கும் அமுதமானவனே! வணக்கம். மணம் பொருந்திய மலரடிகளைப் பெற்றுள்ள பரம்பொருளே! வணக்கம்.
சொற்பொருள் : இடர் - துயரம். எந்தாய் - எம் தந்தையே! அரைசே - மன்னவனே! இடைப்போலி. விரை - மணம்.

வேதி போற்றி விமலா போற்றி

ஆதி போற்றி அறிவே போற்றி

கதியே போற்றி கனியே போற்றி

நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி

உடையாய் போற்றி உணர்வே போற்றி

விளக்கவுரை : மனமெனும் தாமரைப் பீடத்தில் வீற்றிருப்பவனே! வணக்கம். தூய்மையானவனே! வணக்கம். மூலமுதற் பொருளே! வணக்கம். அறிவின் வடிவானவனே! வணக்கம். அண்டி வரும் அடியார் அடைய விரும்பும் புகலிடமானவனே! வணக்கம். இனிய சுவை தருகின்ற கனியாக இருப்பவனே! வணக்கம். புண்ணியக் கங்கையாறு பொருந்திய ஒளிவீசும் சிவந்த சடையைக் கொண்ட சிவபெருமானே! வணக்கம். எம்மை அடிமையாகக் கொண்டவனே! வணக்கம். எம்முடைய உள்ளத்து உணர்வானவனே! வணக்கம்.
சொற்பொருள் : விமலா - தூய்மையானவனே! நம்பன் - சிவபெருமான்.

கடையேன் அடிமை கண்டாய் போற்றி

ஐயா போற்றி அணுவே போற்றி

சைவா போற்றி தலைவா போற்றி

குறியே போற்றி குணமே போற்றி

நெறியே போற்றி நினைவே போற்றி

விளக்கவுரை : கடையேன் ஆகிய யான் உன்னுடைய அடிமை என்பதைக் கண்டு கொண்டாய்! வணக்கம். தலைவா! வணக்கம். நுண்ணியனே! வணக்கம். சைவசமயக் கடவுளே! வணக்கம். அடியவரால் காணப்படும் இலக்கே! வணக்கம். குணமே! வணக்கம். நன்னெறிப் பிழம்பே! வணக்கம். அன்பர்களின் நெஞ்சில் நிலைபெற்றுள்ள எண்ணமே! வணக்கம்.
சொற்பொருள் : கடையேன் - யான் கீழ்மையானவன்.

வானோர்க் கரிய மருந்தே போற்றி

ஏனோர்க் கெளிய இறைவா போற்றி

மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை

ஆழாமே அருள் அரசே போற்றி

தோழா போற்றி துணைவா போற்றி