விளக்கவுரை:விண்ணவராகிய தேவர்களுக்கும் காண்பதற்கரிய அருமை வாய்ந்த அமுதமே! வணக்கம். மற்றவர் காண்பதற்கு எளிமையானவனே! வணக்கம். இறைவனே! வணக்கம். இருபத்தாறு தலைமுறைகளைச் சேர்ந்த உறவினரும், கொடுமை வாய்ந்த நரகில் மூழ்காமல் அருள் பொழிந்த அரசனே! வணக்கம். தோழனே! வணக்கம். உற்ற துணைவனே! வணக்கம்.
சொற்பொருள் : சுற்றம் - உறவினர்.
வாழ்வே போற்றியென் வைப்பே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி அரனே போற்றி
உரையுணர் விறந்த ஒருவ போற்றி
விரிகடல் உலகின் விளைவே போற்றி
விளக்கவுரை : என் இனிய வாழ்வே! வணக்கம். யான் ஈட்டிய சேமநிதியே! வணக்கம். எம்முடைய வீடுபேற்றின் விளக்கமே! வணக்கம். முதன்மையானவனே! வணக்கம். அன்புடைய தலைவனே! வணக்கம். அரனே! வணக்கம். சொல்வதற்கும் உணர்வதற்கும் எல்லை கடந்த ஒப்பிலா ஒருவனே! வணக்கம். அகன்ற கடல் சூழ்ந்த இந்த நிலவுலக வாழ்வின் பயனே! வணக்கம்.
சொற்பொருள் : வைப்பு - சேமநிதி. அத்தன் - தலைவன்.
அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகி லாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி
விளக்கவுரை : அருமையினுள்ளும் எளிய அழகே! வணக்கம். மழைமேகமாகக் கருக்கொண்ட மேகமாகிய கண்ணே! வணக்கம். நிலைபெற்ற திருவருள் மாமலையே! வணக்கம். இழிந்தோனாகிய என்னையும் ஏற்றமுடைய ஒரு மனிதனாக்கி, உன்னுடைய திருவடிகளை என் தலையின்மேல் வைத்து அருள்செய்த பெருவீரனே! வணக்கம்.
சொற்பொருள் : கருமுகில் - கருமையான மழைமேகம். மன்னிய - நிலைபெற்ற. சென்னி - தலை.
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மானேர் நோக்கி மணாளா போற்றி
விளக்கவுரை : வணங்கிய அன்பருடைய துயரம் போக்குபவனே! வணக்கம். அழிவற்ற பேரானந்தப் பெருங்கடலே! வணக்கம். தளர்வதும், வளர்வதும் கடந்தவனே! வணக்கம். உலகப் பொருள்கள் முற்றிலும் அழிந்த காலத்தும், அழிவைக் கடந்த முதன்மையானவனே! வணக்கம். மான் போன்ற கண்களைக் கொண்ட மணாளனே! வணக்கம்.
சொற்பொருள் : தொழுத - வணங்கிய. வாரி - கடல். மணாளன் - கணவன், தலைவன்.