வானகத் தமரர் தாயே போற்றி

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

வளியிடை இரண்டாய் களித்தாய் போற்றி

விளக்கவுரை : வானில் வாழும் தேவர்களின் தாயே! வணக்கம். மண்ணுலகில் பஞ்சபூதங்களாய்ப் பரந்துபட்டவனே! வணக்கம். நீரில் நான்கு தன்மைகளாய் நிலவியவனே! வணக்கம். நெருப்பில் மூன்று தன்மைகளாய் விளங்கியவனே! வணக்கம். காற்றில் இரண்டு தன்மைகளாய்க் களித்தவனே! வணக்கம்.
சொற்பொருள் : வானகத் தமரர் - விண்ணுலகில் வாழும் தேவர்கள். வளி - காற்று.

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

அளிபவர் உள்ளத் தமுதே போற்றி

கனவிலும் தேவர்க் கரியாய் போற்றி

நனவிலும் நாயேற் கருளினை போற்றி

இடைமருது உறையும் எந்தாய் போற்றி

விளக்கவுரை : அண்டவெளியில் ஒரு தன்மையாய் விளைந்தவனே! வணக்கம். மனம் இரங்கி வணங்கும் அடியவர்களின் உள்ளத்தில் அமுதம் போல் இனிப்பவனே! வணக்கம். கனவிலும் தேவர்கள் காண முடியாத அரியவனே! வணக்கம். நனவிலும், நாயேனாகிய எனக்கு அருள் பொழிந்தவனே! வணக்கம். திருவிடைமருதூர் என்னும் திருத்தலத்தில் வாழும் எம் தந்தையே! வணக்கம்.
சொற்பொருள் : உறையும் - வாழும். எந்தாய் - எம் தந்தையே.

கங்கைத் தரித்தாய் போற்றி

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

சீரார் திருவையாறா போற்றி

அண்ணாமலையாய் அண்ணா போற்றி

பருமை நிறைந்த அமுதக் கடலே போற்றி

விளக்கவுரை : செஞ்சடையில் கங்கை நதியைத் தாங்கியவனே! வணக்கம். திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் அரசே! வணக்கம். சிறப்பு மிகுந்த திருவையாறு ஊரனே! வணக்கம். திருவண்ணாமலை என்னும் திருத்தலத்தில் விளங்குகின்ற முன்னவனே! வணக்கம். பருமை நிறைந்த அமுதக் கடலே! வணக்கம்.
சொற்பொருள் : தரித்தாய் - அணிந்தாய். ஆரூர் - திருவாரூர் என்னும் திருத்தலம்.

ஏகம்பம் உறை எந்தாய் போற்றி

பாகம் பெண் உரு வானாய் போற்றி

பராய்த்துறை மேவிய பரனே போற்றி

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

மற்றோர் பற்றிங்கு அறியேன் போற்றி

விளக்கவுரை : திருவேகம்பம் என்னும் திருத்தலத்தில் வாழும் எம் தந்தையே! வணக்கம். திருவுடலின் இடப்பாகம் பெண் வடிவம் ஆனவனே! வணக்கம். திருப்பராய்த்துறை என்னும் தலத்தில் வீற்றிருக்கும் மேலோனே! வணக்கம். திருச்சிராப்பள்ளி என்னும் திருத்தலத்தில் அமர்ந்த சிவபெருமானே! வணக்கம். யான் உன்னைத் தவிர வேறொரு பற்றையும் இங்கு அறியேன்! வணக்கம்.
சொற்பொருள் : எந்தாய் - தந்தையே. சிராப்பள்ளி - திருச்சிராப்பள்ளி.