சொற்பொருள் : அஞ்சேல் - பயப்படாதே. நஞ்சு - விஷம். நயந்தாய் - விரும்பினாய். அத்தன் - அப்பன், நித்தன் - நிலையானவன், நீமலன் - தூய்மையானவன்.

பத்தா போற்றி பவனே போற்றி

பெரியாய் போற்றி பிரானே போற்றி

அரியாய் போற்றி அமலா போற்றி

மறையோர் கோல நெறியே போற்றி

முறையோ தரியேன் முதல்வா போற்றி

விளக்கவுரை : பத்தனே! வணங்குகிறேன். படைப்பவனே! வணங்குகிறேன். பெரியவனே, தலைவனே! உன்னை வணங்குகிறேன். யாவர்க்கும் அரியவனே, மலம் அற்றவனே! உன்னை வணங்குகிறேன். அந்தணர் கோலத்தில் வந்து, அறியாமையை அகற்றிய அரிய நீதிமானே! உன்னை வணங்குகிறேன். எனது பிறவியாகிய பெருநோயைப் போக்காதிருப்பது உனக்கு முறையாகுமோ? இனியும் உயிர் தாங்க மாட்டேன். உலக முதல்வனே! உயிர்க்குல முதல்வனே! உன்னை வணங்குகிறேன்.
சொற்பொருள் : பவன் - படைப்பவன். அமலன் - மலம் அற்றவன்.

உறவே போற்றி உயிரே போற்றி

சிறவே போற்றி சிவமே போற்றி

மஞ்சா போற்றி மணாளா போற்றி

பஞ்சேரடியாள் பங்கா போற்றி

அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி

விளக்கவுரை : சுற்றமானவனே! உயிரானவனே! உன்னை வணங்குகிறேன். சிவபரம்பொருளே, அழகனே! உன்னை வணங்குகிறேன். மஞ்சனே, மணவாளனே! உன்னை வணங்குகிறேன். செம்பஞ்சுக் குழம்பு பூசிய அழகான திருவடிகளை உடைய உமாதேவியாரைப் பாகமாக உடையவனே! உன்னை வணங்குகிறேன். துன்பத்தில் உழன்றேன், நாயேனாகிய யான் உன்னை வணங்குகிறேன்.
சொற்பொருள் : பஞ்சேரடியாள் - உமாதேவியார். அலந்தேன் - துன்புற்றேன்.

இலங்கு சுடரெம் ஈசா போற்றி

கவைத்தலை மேவிய கண்ணே போற்றி

குவைப்பதி மலிந்த கோவே போற்றி

மலைநாடு உடைய மன்னே போற்றி

கலையார் அரிகேசரியாய் போற்றி

விளக்கவுரை : விளங்குகின்ற ஒளிமயமாகிய எம்முடைய ஈசனே! வணக்கம். கவைத்தலை என்னும் திருத்தலத்தில் விருப்பமுடன் அமர்ந்த கண்ணே, கண்மணியே! வணக்கம். குவைப்பதி என்னும் திருத்தலத்தில் அமர்ந்த அரசே! வணக்கம். மலைநாட்டை உறைவிடமாகக் கொண்ட மன்னவா! வணக்கம். கலைகள் நிரம்பிய அரிகேசரி என்னும் திருத்தலத்தை வாழும் இடமாகக் கொண்டவனே! வணக்கம்.
சொற்பொருள் : இலங்கு - விளங்குகின்ற. அரிகேசரி - சிவத்தலம்.

திருக்கமுக் குன்றில் செல்வா போற்றி

பொருப்பமர் பூவணத் தரனே போற்றி

அருவமும் உருவமும் ஆனாய் போற்றி

மருவிய கருணை மலையே போற்றி

துரியமும் இறந்த சுடரே போற்றி