விளக்கவுரை : திருக்கழுக்குன்றத்தில் விளங்குகின்ற செல்வனே! வணக்கம். மலைகள் சூழப் பெற்ற திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய சிவபெருமானே! வணக்கம். உருவம் இல்லாமலும் உருவம் பெற்றும் அருள் செய்பவனே! வணக்கம். பொருந்திய பெருங்கருணைப் பெருமலையே! வணக்கம். துரியநிலை என்னும் யோக நிலையையும் கடந்து துரியாதீதப் பேராளியே! வணக்கம்.
சொற்பொருள் : பொருப்பு - மலை, மருவிய - பொருந்திய.

தெரிவரி தாகிய தெளிவே போற்றி

தோளா முத்தச் சுடரே போற்றி

ஆளா னவர்கட் கன்பா போற்றி

ஆரா அமுதே அருளே போற்றி

பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி

விளக்கவுரை : தெரிந்து கொள்வதற்கு அரிதாகிய தெளிவே! வணக்கம். துளைக்கப்படாத முத்து மணியின் தூய ஒளியே! வணக்கம். அடியவர்களுக்கு அன்பனே! வணக்கம். தெவிட்டாத அமுதமே! திருவருளே! வணக்கம். திருப்பெயர்கள் ஆயிரமாய்க் கொண்ட பெருமானே! வணக்கம்.
சொற்பொருள் : தோளா - துளைக்கப்படாத, பெம்மான் - பெருமான்.

தாளி அறுகின் தாராய் போற்றி

நீளொளி யாகிய நிருத்தா போற்றி

சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி

சிந்தனைக் கரிய சிவமே போற்றி

மந்தர மாமலை மேயாய் போற்றி

விளக்கவுரை : தாளிக்கொடி, அறுகம்புல் ஆகியவற்றால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவனே! வணக்கம். பேரொளியின் வடிவமாகிய நடனமிடுவோனே! வணக்கம். சந்தனக் குழம்பைப் பூசிய திருவுடல் அழகனே! வணக்கம். நினைவுக்கும் எட்டாத சிவபெருமானே! வணக்கம். மறைகளை விளக்கியருள மகேந்திர மலையில் அமர்ந்திருப்பவனே! வணக்கம்.
சொற்பொருள் : அறுகு - அருகம்புல், நிருத்தன் - கூத்தன், சுந்தரன் - அழகன்.

எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி

புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி

அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி

கருங்குருவிக் கன்று அருளினை போற்றி

இரும்புலன் புலர இசைந்தனை போற்றி

விளக்கவுரை : எங்களைக் கடைத்தேறுமாறு ஆண்டு கொள்பவனே! வணக்கம். புலியின் முலைப்பாலை கலைமான் கன்று பருக அருள் செய்தவனே! வணக்கம். கடல்மேல் நடந்தவனே! வணக்கம். முன்னை நாளில் கருங்குருவிக்கு அருள்புரிந்தவனே! வணக்கம். ஐம்புலன்கள் அடங்க, அருள்புரிய ஒப்பியவனே! வணக்கம்.
சொற்பொருள் : உய்ய - ஆட்கொள்ள, புல்வாய் - கலைமான், மீமிசை - மேலே.

படியுறப் பயின்ற பாவக போற்றி

அடியொடு நடுவீற் ஆனாய் போற்றி

நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமல்

பரகதி பாண்டியற் கருளினை போற்றி

ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி