விளக்கவுரை :
என்னை ஆட்கொள்வதற்காக விண்ணிலிருந்து, மண்ணிற்கு இறங்கி வந்த தூய்மையானவனே!
வணக்கம். முதலும், நடுவும், முடிவுமாய் இருப்பவனே! வணக்கம். நரகம், சுவர்க்கம்,
மண்ணுலகம் ஆகியவற்றுள் போய்ப் பிறக்காமல், வீடுபேற்றை வரகுண பாண்டிய மன்னனுக்கு அருள்
செய்தவனே! வணக்கம். நீக்கமற எல்லாவிடங்களிலும், எல்லாப் பொருள்களிலும் நிறைந்துள்ள
ஒப்பற்றவனே! வணக்கம்.
சொற்பொருள் :
ஒழிவற - நீக்கமற.
செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்
குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி
விளக்கவுரை :
செழுமையான மலர்கள் நிறைந்துள்ள சிவபுரத்துக்குத் தலைவனே! வணக்கம்.
செங்கழுநீர் மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்திருக்கும் கடவுளே! வணக்கம். வணங்கும்
அடியவருடைய அறியாமையை நீக்குபவனே! வணக்கம். பிழை என்றும் சரி என்றும் ஏதும் அறியாத
நாயடியேன், உள்ளம் உருகி தொடுத்த சொல்லால் அமைந்த மாலையை ஏற்றுக் கொண்டருளும் தேவே!
வணக்கம்.
சொற்பொருள் :
கழுநீர் - செங்கழுநீர் என்னும் ஒருவகை மலர், தொழுவார் - வணங்குவார்,
மையல் - மயக்கம், துணிப்பாய் - நீக்குவாய், குழைத்த - உள்ளம் உருகிய.
புரம்பல எரித்த புராண போற்றி
பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றி போற்றி புராண காரண
போற்றி போற்றி சயசய போற்றி
விளக்கவுரை :
முப்புரங்களை எரித்த, மிகவும் பழமையானவனே! உன்னை வணங்குகிறேன்.
பாம்பினை அணிந்திருக்கும் பெருமானே! உன்னை வணங்குகிறேன். எல்லாவற்றுக்கும் பழமை வாய்ந்த
காரணனே! உன்னை வணங்குகிறேன், வணங்குகிறேன். வெற்றியே! வெற்றியே! உன்னை வணங்குகிறேன்.
சொற்பொருள் :
புராணன் - பழமையானவன், போற்றி - வணக்கம், சயசய - வெற்றி, வெற்றி.
வழியாட்டுப் பதிகங்கள்
ஸ்ரீ விநாயகப் பெருமான் துதி
கரத்தனை யானை முகத்தனை
கந்தன் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடிப் போற்றுகின் றேனே
ஸ்ரீ நந்தியம்பெருமான் சன்னிதி (கொடிமரம்)
அங்கணன் கயிலைகாக்கும் அகம்படித் தொழில்பூண்
நங்குரு மரபிற்கெல்லாம் முதற்குரு நாதனாகி
பங்கயத் துளவம் நாறும் வேத்திரப் படை பொருந்த
பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி