கயிலை காக்கும் சிவபெருமானின், அகத்தை காப்பதை முதன்மைத் தொழிலாகக் கொண்டு நம்குரு மரபிற்கெல்லாம் முதல் குருவான தலைவனே, தாமரை தாள்களின் வாசனை பொருந்திய படைகளையுடைய எம்மையான சிவபெருமானை தாங்கும் நந்தியெம்பருமானை போற்றி வணங்குகின்றோம்.

நந்தி மகாத்மியம் - திருமூலர் திருமந்திரம்

பெறுதற்கரிய பேறுகளைப் பெற்றுத் தரக்கூடிய பிரதோஷ வழிபாடு

சிறப்பான இந்நன்னாளில் பொதுவான நந்தி பாடல்கள், போற்றிகளை படிப்பதை விட நந்தியம்பெருமானையே குருவாகக் கொண்டு வேதங்கள் ஆகமங்களின் உட்பொருளை உபதேசமாகப் பெற்று உயர்வுக்கும் உயர்வான சைவ சாராம்ச பொக்கிஷமாம் திருமந்திரம் அருளிய திருமூல தேவநாயனாரின் சக்தி மிகுந்த மந்திரங்களை படித்து வழிபடுவதால், அளப்பரிய நன்மைகளை அனைவரும் பெறலாம்.

திருமந்திரத்தின் அருமை பெருமைகளை அறிந்து அதை படித்தால், சைவர் அதாவது, தமிழர்களாகிய நம்வாழ்வு வானளாவ உயரும். நந்தியம்பெருமான் நமக்கு அருள வேண்டும் என்று கருதியதால், அவன் அருளாலே அவன் தாள் வணங்குதற்கு ஏதுவாக திருமூலர் அருளிய 3000 மந்திரங்கள் வெளிப்பட்டு, தற்போது அவற்றுள் சில தங்கள் கைகளில் வந்துள்ளது.

ஒவ்வொன்றும் சக்தி வாய்ந்த மந்திரம் என்பதை உணர்ந்து இதை ஒவ்வொரு பிரதோஷமும் ஓதி நந்தியம்பெருமானிடம் தாங்கள் வைக்கும் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் விரைவில் நிறைவேறும்.

அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரிசு ஆயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே.
சந்தி எனத்தக்க தாமரை வாள்முகத்து
அந்தமில் ஈசன் அருள் நமக்கேல் என்று
நந்தியை நாளும் வணங்கப்படும் அவர்
புந்தியினுள்ளே புகுந்து நின்றானே.
வானின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின்று அழைக்குங்கொல் என்று தயங்குவார்
ஆனின்று அழைக்கும் அதுபோல் என் நந்தியை
நானின்று அழைப்பது ஞானங்கருதியே.
பிதற்றொழியேன் பெரியான் அரியானைப்
பிதற்றொழியேன் பிறவா உருவானைப்
பிதற்றொழியேன் எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழியேன் பெருமைத்தவன் நானே.
களிம்பறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தீ
களிம்பறுத்தான் அருட்கண் விழிப்பித்துக்
களிம்பணுகாத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.
சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில் தாம் பெற்ற
நவஆகமம் எங்கள் நந்திபற்றானே.
மாதவர் எல்லாம் மாதேவன் பிரான் என்பர்
நாதமதாக அறியப்படும் நந்தீ
பேதம் செய்யாதே பிரான் என்று கைதொழில்
ஆதியும் அந்தமும் ஆகி நின்றானே.
பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனையாகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பதமும் அளித்தான் எங்கள் நந்தியே.
வேயின் எழுங்கனல் போலே இம்மெய்யெனும்
கோயிலிருந்து குடிகொண்ட கோன்நந்தீ
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயமதாய் எழுஞ் சூரியனாமே.
சந்திப்பது நந்தி தன் திருத்தாளினை
சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி
வந்திப்பது நந்தி நாமம் என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்தி பொற்போதமே.