தெளிவுரை : வெம்மை தரும் கதிரவனுடைய ஒளியும் அற்றுப் போகுமாறு மேகத்தில் திரிந்த மூன்று கோட்டைகளைச் செயலிழக்கச் செய்தவன் ஈசன். அவ் அண்ணாமலையானைப் பாடிய, குளிர்ந்த சீர்காழியின் ஞானசம்பந்தன் தமிழாகிய இத் திருப்பதிகத்தை ஓதவல்லார்தம் திருவடி பேணுதல் பெருந்தவம் ஆகும்.
சிறப்புரை : ஈசனே மலையாக விளங்குவதை ஏயாட்டிக் கதிரவன் தன் வன்மைக் கரங்களாகிய கதிர்களால் தீண்டுவதற்கு அஞ்சி விலகிச் செல்ல மேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சி தரும் சிறப்பு கூறப்பட்டது. சீர்காழிப் பதியில் கொம்பு எனும் ஒருவகை இசைக்கருவியின் ஒலியைக் குயில் எழுப்பும் என்று இசையின் மேன்மை கூறப்பட்டது. திருஞானசம்பந்தர் தமிழில் ஓதிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் திருத்தொண்டர்கள் ஆகுதலையும் அவர்தம் அடிபரவுதல் அடியாரைப் போற்றல் என்பதனையும் உணர்த்திற்று. இது சங்கம வழிபாடு - அடியார் வழிபாடு ஆகும்.
தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசியென்
உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து
ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய
பெம்மான் இவன் அன்றே.
தெளிவுரை : தோடு என்னும் அணியை அணிந்துள்ள உமாதேவியை இடப்பாகம் உடைய சிவபெருமான் இடபவாகனத்தில் ஏறி, தூய வண்மதியைச் சூடி திருவெண்ணீறு மேனியில் பொலிய என் உள்ளத்தைக் கவர்ந்தவன். அப்பெருமான், ஒரு காலத்தில் நான்முகனுடைய வழிபாட்டினை ஏற்று அருள் செய்தவன். அவனே எனக்குக் காட்சி தந்தருளியவன். அவன் இவனே அல்லவா!
சிறப்புரை : சிவபெருமானுடைய திருக்கோலமும், அவனுடைய கருணையும், அப்பெருமானை வழிபடுபவர்களுக்கு அருள்புரியும் பண்பும் இப்பாடலில் சிறப்பிக்கப்படுகிறது.
கொடுமைபல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே
தெளிவுரை : திருவதிகையில் கெடில நதியின் பக்கத்தில் மேவும் வீரட்டானத்தில் வீற்றிருக்கும் அழகிய தலைவனே! வினைப்பயனால் பிணியுற்றுத் துன்புறுதல் நியதியாயினும், அத்தகைய வினையானது யாதென நான் அறியேன். அத்துன்பமானது, எத்தகைய தீர்வுக்கும் இடம் இன்றி என் உடலின்கண் குடரோடு சேர்ந்து வருத்துகின்றது. அப்பிணியானது கூற்றுவனைப் போன்று வருத்துகின்றது. என்னால் தாங்க முடியவில்லை; அதனை விலக்காதது ஏனோ! தேவரீரே! என்னைப் பீடித்துள்ள வயிற்று நோயைத் தீர்த்தருள்வீராக. நான் இப்போது உமது திருவடிக்கே ஆளாக்கப்பட்டுத் தேவரீர் என்னை ஏற்றுக் கொண்டுள்ளீர். தேவரீரைப் பகலிலும் இரவிலும் பிரிதல் இல்லாது வணங்குவேன்.