கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றீக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள் எங்கள் அம்பிகையே

20. மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்)

தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.

21. தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்)

ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரைஇடுவாள்கொன்றை வேணிஅரன்
சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள்
வாராஹி வந்து குடிஇருந்தாள்என்னை வாழ்விக்கவே.

22. தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)

தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே.

23. புகழ்சொற்பாமாலை (மௌனானந்த யோகம்)

ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடு
யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல்ஆழி உண்டு
காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉண்டே.

24. படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)

உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.

25. பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)

தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.

26. படைநேமி வாழ்த்து (சிந்தனானந்த யோகம்)

அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்ட வயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவார் கண்டீர்
நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே.

27. அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)

சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே
அந்தி பகல்உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே.