28. திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக் குவால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே.
29. பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)
தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு
கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.
30. சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரி அயன் போற்றும் அபிராமி தன் அடியார்க்கு முன்னே
சரியாக நின்று தருக்கம் செய் மூடர் தலையைவெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே.
31. நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்)
வீற்றிருப்பாள் நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள் கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கே என்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே.
32. நிறைமங்கலம் (சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே.
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சன்னதி
கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா
றங்கமுதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறக்க்கப் பாலாய்
எல்லாமாய் யல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டி
சொல்லாமற் சொன்னவரை நினையாமல்
நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்.
கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து நான்கு முனிவர்களுக்கும் சின்முத்திரையின் மூலம் ஆறு பொருள்களையும் இருந்த இடத்திலிருந்தே உணர்த்திக்காட்டிய தென்முக கடவுள் ஆகிய தெட்சிணாமூர்த்தியைப் போற்றி வணங்குவோம்.
ஸ்ரீ விகடச்சக்கர விநாயகர் சன்னதி
ஜெய கணேச ஜெய கனேச ஜெய கணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ரக்ஷமாம்!!
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணி யாவுறை
விகட சங்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்.
-கச்சியப்பர்