விளக்கவுரை : வெப்பம், குளிர்ச்சி - இவை இரண்டுமாய் விளங்குபவனே! ஆன்ம வடிவினனாகிய தூய்மையானவனே! இம்மண்ணுலகில், பொய்யானவை யாவும் என்னைவிட்டு அகன்று போகுமாறு எழுந்து வந்து அருள் செய்து, மெய்யறிவாகி ஒளிவீசும் மெய்யொளியே! எவ்வித அறிவும் இல்லாதவனாகிய எனக்குப் பேரின்பமே உருவான பெருந்தலைவனே! அறியாமை இருளை என் உள்ளத்திலிருந்து அகற்றும் நல்லறிவே!
சொற்பொருள் : விமலன் - தூய்மையானவன். மிளிர்கின்ற - பிரகாசிக்கின்ற. மெய்ச்சுடரே - உண்மைப்பொருளே. அஞ்ஞானம் - அறியாமை. அஞ்ஞானம் - இறைவனை அறிந்து கொள்ள இயலாத அறிவு.

ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே

விளக்கவுரை : தோற்றம், எல்லை, இறுதி - இவை மூன்றும் இல்லாதவனே! உலகங்கள் அனைத்தையும் படைப்பாய்; காப்பாய்; அழிப்பாய்; அவற்றுக்கு அருள்புரிவாய்; பிறவி என்னும் பெருநோயைப் போக்குவாய்; என்னை உன்னுடைய அடியவர் கூட்டத்துள் சேர்ப்பாய், உன்னை அடைவதற்காக சிறந்த வழி காட்டுபவனே! உன்னை விரும்பி வணங்காதவர்க்குத் தொலைவில் இருப்பவனே! விரும்பி வணங்குவோர்க்கு விரைவில் அருள்பவனே! மொழிக்கும், மனதிற்கும் எட்டாமல் விளங்குகின்ற வேத வடிவினனே!
சொற்பொருள் : ஆக்கம் - தோற்றம். அளவு - எல்லை. இறுதி - முடிவு. தொழும்பு - அடியவர் கூட்டம். சேயாய் - தொலைவில் இருப்பவனே.

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்களோர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை

விளக்கவுரை : கறந்த பாலில், கரும்புச்சாறும் நெய்யும் கலந்தது போல, மேலான அடியவர் தம் எண்ணத்தில் தேன் போன்று இனிப்பவனே! பிறப்பை அழிக்கும் எங்களுடைய பெருமானே! படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களுக்குமாகிய ஐந்து உருவங்களைப் பெற்றவனே! தேவர்கள் உன்னை வணங்கியும், அவர்களுக்குக் காட்சியளிக்காமல் மறைவாய் நின்றவனே! எம்முடைய தலைவனே! கொடிய வினையேனாகிய என்னை,
சொற்பொருள் : கன்னல் - கரும்பு. ஏத்த - வணங்க.

மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி

புறந்தோல் போர்த்தெங்கும் புழுஅழுக்கு மூடி

மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய

விளக்கவுரை : மறையும்படி மூடிய மாயமாம் இருட்டினை, நல்வினைப் பயன் மற்றும் தீவினைப் பயன் என்னும் அரிய பெருங்கயிற்றால் கட்டி, புறத்தில் தோலினால் மூடி, உடல்முழுக்க உள்ளே புழுவையும் அழுக்கையும் மறைத்து, அழுக்கு ஒழுகும் ஓட்டைகளாம் ஒன்பது வழிகளைக் கொண்ட உடம்பாகிய குடிசையினைத் தந்து, அது துன்பப்படும்படி ஐம்புலன்களும் அதற்கு வஞ்சகத்தையே செய்ய,