ஆனந்தத் தாண்டவத்தின் தத்துவ வடிவமாகக் கருதினர். இத்திருவுருவைக் கண்டு இன்றைய விஞ்ஞானிகள் வியக்கின்றனர். அந்த வியப்பில் மேலும் அண்ட சராசரங்களைப் பற்றி அறியத்தான் CERN இன் முகப்பில் நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளதோ!

நடராஜ வடிவின் உட்பொருள்

நடராஜ வடிவம் என்ற நூலின் ஆசிரியரும், ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தின் முன்னாள் ஆசிரியருமான சுவாமி விபுலானந்தர் ஆகம சாஸ்திரத்தை அறியாமல் யாரும் நடராஜரின் உடற்கூற்றுத் தத்துவத்தை உணர முடியாது என்கிறார். நடராஜ வடிவம் ரிஷிகளின் தியானத்தில் தோன்றியது. இத்தாண்டவம் மிகவும் நுட்பமானது.

நடராஜரின் வைத்த திருவடி

வலது பாதம் முயலகம் என்ற அசுரனின் மீதிருக்கும். அறியாமையை விரட்ட வேண்டும் என்பதை இது குறிக்கிறது.

தூக்கிய திருவடி

தூக்கியிருக்கும் இடது பாதம் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான காலச்சக்கரத்திலிருந்து விடுபடும் ஆன்மாவைக் குறிக்கும்.

உடுக்கை ஏந்திய திருக்கை

இந்தக் கையிலுள்ள உடுக்கை எழுப்பும் சப்தம் ஆக்கலைக் குறிக்கும். முதன் முதலில் எழுந்த சப்தத்திலிருந்தே பிரபஞ்சம் வந்ததாக வேதங்கள் கூறுகின்றன. சில அறிவியல் அறிஞர்களின் கருத்துப்படி பிரபஞ்ச ஆரம்பத்தில் பெரும் ஒலி உண்டானதாகக் கூறப்படுகிறது. இன்றும் விஞ்ஞானிகள் இந்த ஒலி, அதாவது Cosmic Background Radiation-ஐப் பற்றி ஆராய்கின்றனர். சில அறிஞர்கள் இதை ஓம் எனும் பிரணவ ஒலி என்கின்றனர். வேதங்களும் இந்தப் பிரணவத்திலிருந்து பிரபஞ்சம் பிறந்ததாகக் கூறும்.

அக்னி ஏந்திய மேல் இடது கை

பிறைவடிவில் காணப்படும் இது அழித்தலைக் குறிக்கும். பிரபஞ்சம் தோன்றியபோது பல நுண்துகள்கள் உண்டாகி நீர்மூலமாகின்றன என்பதை இது உணர்த்துகிறது.

வலது அபய கரம்

இது காத்தலைக் குறிக்கிறது. பெருவெடிப்பு மூலம் தோன்றிய நுண்துகள்கள் உடனே அழிந்திடாமல் சிறிது காலம் காக்கப்படுகின்றன. பின் அவை ஒன்றோடொன்று சேர்ந்து பெரும் துகள்களாக மாறுகின்றன. பிறகு அவையே கோள்களாகவும் உருமாறின. இப்படித் துகள்கள் அழிந்திடாமல் காப்பதை இது குறிக்கிறது.

இடது கரம்

யானையின் துதிக்கை போல் இருப்பதால் இது கஜ ஹஸ்த முத்திரை எனப்படும். இறைவனின் நான்கு கைகளும் திசைகளைக் குறிக்கும்.

தீ ஜுவாலையான திருவாசி

நடராஜரைச் சுற்றியுள்ள திருவாசி பிரகிருதியை, அதாவது எல்லாப் பொருள்களையும் குறிக்கிறது. தீ ஜுவாலை நம்மைச் சுற்றியிருக்கும் பிறப்பு, இறப்பு மற்றும் சம்சாரச் சக்கரத்தைக் குறிக்கிறது. நமது சராசரம் சுழன்று கொண்டே இருக்கும். ஒரு சக்கரம் என்ற இயற்பியல் தத்துவத்துடன் இது பொருந்துகிறது.

திருமுகம் மற்றும் சிரம்

நடராஜரின் திருமேனி மிக வேகமான ஓர் அசைவைக் காட்டினாலும் திருமுகம் மிக அமைதியான புன்முறுவலுடன் விளங்குகிறது. இது இறைவன் பலவிதமான கோட்பாடுகளை உள்ளடக்கியவர் எனக் காட்டுகிறது. பெருமானின் வலது செவியில் ஆண் அணியும் தோடும், இடது செவியில் பெண் அணியும் தோடும் அமைந்துள்ளன. உலகம் ஆண், பெண், சிவ, சக்தி கோட்பாடுகளால் ஆனது என்ற தத்துவத்தை இது வலியுறுத்துகிறது. மூன்றாவது கண் ஞானத்தையும், வளர்பிறை மற்றும் தேய்பிறையைக் குறிக்கும் சந்திரன் காலச் சக்கரத்தையும், சுழன்று வருதல் ஆக்கல் மற்றும் அழித்தலையும் குறிக்கின்றன. சிரசில் உள்ள மண்டையோடு உயிர்கள் வென்று மரணமிலாப் பெருவாழ்வை பெற வேண்டும் என்பதையும் காட்டுகிறது.