பஞ்சபூதங்கள் : நீர், நிலம், காற்று, அக்னி மற்றும் ஆகாசம் நடராஜ வடிவத்தின் அங்கங்களாகக் காணப்படுகின்றன. இந்து சாஸ்திரங்களின்படி, அண்டசராசரம் இந்த ஐந்தினாலேயே உருவானது. இறைவனின் ஊன்றிய வலது பாதம் பூமியைக் குறிக்கிறது. மேலிருக்கும் இடது கையில் அக்னி, மெய்மறந்த நடனம் உருவாக்கும் காற்று, பரந்த விரிந்த ஜடாமுடியின் மூலம் விளக்கப்படுகிறது. அவரது சிரசிலுள்ள கங்கை, நீரையும் கையிலுள்ள டமரு, ஆகாயத்தையும் குறிக்கும். பஞ்ச பூதங்களும் அவருள் அடக்கம்.

இப்பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்கிற ஆழ்ந்த கருத்து சிவதாண்டவத்தில் அடங்கியுள்ளது. இத்தாண்டவ நிலையில் மிகச் சிறிய அணுத்துகள்கள் முதல் மிகப்பெரிய கோள்கள் வரை எல்லாப் பொருள்களின் இயக்கங்களும் அடங்கியுள்ளன. நடராஜ வடிவை நம் முன்னோர் ஒரு கலைப் பொக்கிஷமாகவும் ஓர் அறிவியல் கோட்பாடாகவும் கண்டனர்.

அறிஞர்களின் பார்வையில்

கலை - வரலாற்று அறிஞர் ஆனந்த குமாரசாமி, எந்த ஒரு கலையும் மதமும் பெருமைப்படும் வகையில் அமைந்த இறைவனின் செயலை உணர்த்துவதே நடராஜ வடிவம் என்றார்.

‘Tao of Physics’ என்னும் நூலின் ஆசிரியரும் இயற்பியல் வல்லுநருமான பிரிட்ஜாப் காப்ரா (Fritjof Capra), நவீன இயற்பியலுக்கும் கிழக்கிந்திய ஆன்மிகத்திற்கும் உள்ள தொடர்பை இப்புத்தகத்தில் வெளிப்படுத்துகிறார். 1975-ல் வெளியான இந்த நூல் 25 ஆண்டுகளாக தொடர்ந்து பதிப்பிடப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் ஒரு கோடிக்கும் மேலாக விற்கப்பட்டுள்ளது. 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்த நூலில் காப்ரா, “நவீன இயற்பியலின் படி, ஆக்கல், அழித்தலின் தாளம் (Rhythm) என்பது காலங்களில் ஏற்படும் மாற்றம், பிறப்பு, இறப்பு ஆகிய மாற்றங்கள் மற்றும் எல்லாவிதமான உயிர் பொருள் சார்பில்லாத மூலக்கூறுகளின் உட்பொருளாகும். ஒவ்வொரு நுண் அணுவும் சக்தித்தாண்டவத்தின், ஆக்கல் மற்றும் அழித்தலில் முடிவில்லா ஒரு பயணமாகச் செயல்படுகிறது” என்கிறார்.

“நவீன இயற்பியல் அறிஞர்களுக்கு சிவதாண்டவம் என்பது ஒரு நுண் அணுவின் தாண்டவமே. இந்து புராணங்களிலோ, இந்தத் தாண்டவமானது அண்ட சராசரமே அடங்கும் ஒரு பகுதியாகக் கருதப்படும் ஆக்கல், மற்றும் அழித்தலின் ஓர் அங்கமாகும். இதுவே எல்லாவித உயிரினங்களுக்கும் அடிப்படையான ஓர் இயற்கையான சம்பவம்.” காப்ரா மேலும் கூறுகையில், பண்டைய இந்தியக் கலைஞர்கள் இந்தத் தாண்டவத்தை வெண்கலச் சிலைகளாக உருவாக்கினர். இக்கால விஞ்ஞானிகளோ, அதிநவீன சாதனங்களைக் கொண்டு இந்தத் தாண்டவத்தை நடத்துகின்றனர். இவ்வாறு நடராஜ வடிவம் பண்டைய புராணம், மதம் போற்றும் கலையையும் மற்றும் நவீன கால இயற்பியலையும் ஒன்றிணைக்கிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் கார்ல் சேகன் (Carl Sagan), “பண்டைய கால இந்துக்கள் இந்த ஆக்கல், காத்தல், அழித்தல் அடங்கிய தாண்டவத்தை ஓர் இறைவடிவமாகவே கண்டனர். அதையே அவர்கள் சிலையாக வடித்தனர்” என்கிறார். இவ்வாறு மேலைநாட்டு அறிஞர்கள் நடராஜரைப் போற்றும்போது இந்தியர்கள் மட்டும் விலகியே நிற்கின்றனர்.

“Quantum Physics and the Dance of Nataraja” என்ற கட்டுரையில் George Kalamaras என்பவர் நம் இந்தியர்களின் அறியாமையைப் பற்றி எழுதியிருக்கிறார். “ஏசுவின் சிலை வாயிலில் வைக்கப்பட்டிருந்தால் இந்நேரம் கிறிஸ்தவ மத போதகர்கள் எத்துணை ஆதாயம் தேடியிருப்பார்கள்? இந்துக்கள் மட்டும் ஏன் நமது கலை பண்பாட்டு விஷயங்களில் குருடர்களாகி விட்டனர்?” என்று பேராசிரியர் சக்கரபாணி வருந்துகிறார்.

“எண்ணற்ற பெருமைகளையும், வானம்போல தெளிவையும், அனைத்திற்கும் தலைவனான, தன்னையே கடந்தவனான சிவபெருமானிடம் மாறாத பக்தி ஏற்படட்டும்” என்று சுவாமி விவேகானந்தர் பிரார்த்திக்கிறார். நடராஜப் பெருமான் நமக்கும் அப்படியே அருள் வேண்டிப் பிரார்த்திப்போம்.