நால்வர் துதி
பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வன்றொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி.
சமயக்குரவர் துதி
சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதிற்சார் சிவமாம்
தெய்வத்தின் மேல் தெய்வம் இல் எனும் நான்மறைச் செம்பொருள்
வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும்,
உய்வைத் தரச் செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்துணையே.
பன்னிரண்டாம் திருமுறை
திருத்தொண்டர் புராணம்
உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில்சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
சிவனொடாக் கும் தெய்வந் தேடினும் இல்லை
அவனொடேப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னாளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரையானே.
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன்றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறியேனே.
அர்த்தஜாம பூஜை அம்மன் வழிபாடு
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரோடு கூட்டு கண்டாய்.
அலையாழி அரிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே.