திருப்பொன்னூசல்

(தில்லையில் அருளியது)

அருட்சுத்தி

(ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பர்)

பொன்னூசல் என்பது பொன்னாலாகிய ஊசல் என்று பொருள்படும். ஊசல் - ஊஞ்சல். பண்டைத் தமிழகப் பெண்கள், பாடியபடியே ஊஞ்சலாடுவது மரபு. அப்போது பாடக்கூடிய பாடலை, ‘ஊசல்வரி’ என்று நூல்கள் கூறுகின்றன.

அருட்சுத்தி என்பது, இறைவனின் தூய்மையான அருளைப் பெறுதல் அல்லது அதனுடன் கலத்தல் என்று பொருள்படும். இப்பகுதியில் 9 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும், ‘பொன்னூசல் ஆடாமோ’ என்ற தொடர் இடம் பெற்றிருக்கும்.

சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தா ளிணைபாடிப்
போரார் வேற்கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ.

விளக்கவுரை: போர் செய்கின்ற கூர்மையான வேல் போன்ற கண்களையுடைய பெண்களே! சிறப்பு வாய்ந்த பவளத்தினால் ஆகிய தூண்களையும், நல்ல முத்துகளால் ஆகிய கயிறுகளையும், அழகிய தங்கத்தால் ஆகிய பலகையையும் கொண்டு உருவாக்கப்பட்ட ஊஞ்சலில் நாம் ஏறி இனிதாக அமர்வோம்.

உத்தரகோசமங்கை என்னும் திருத்தலத்தில் தெவிட்டாத தெள்ளமுதம் போன்ற சிவபெருமான், திருமாலும் அறிந்து கொள்ள இயலாத தன்னுடைய அன்றலர்ந்த தாமரை போன்ற திருவடிகளை நாயடியேன் அறிந்து கொள்ளுமாறு காட்டியதுடன், நான் தங்கிக் கொள்ளும் இடமும் அவையே ஆகுமாறு அருள்புரிந்தான். அத்தகைய அருள் வழங்கும் திருவடிகள் இரண்டினையும் நாம் பாடிப் பொன்னூசல் ஆடுவோமாக!

சொற்பொருள்:சீர்-சிறப்பு, ஏர் - அழகு, நாண்மலர் - நாள்+மலர். அன்றலர்ந்த தாமரை மலர். போரார் மேற்கண் மடவீர் - போர் செய்கின்ற கூரிய வேல் போன்ற கண்களையுடைய இளம்பெண்களே

மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேன்தங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு
ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ.

விளக்கவுரை: அழகிய மயில் போன்ற சாயலையும், நல்ல அன்னம் போன்ற நடையையும் கொண்ட பெண்களே! மூன்று கண்களையுடையவன் எம்முடைய சிவபெருமான். முதுமை இல்லாத வானில் வாழும் தேவர்களுமே காண இயலாத தாமரைத் திருவடிகள் கொண்டவன். அந்தத் திருவடிகள் தேன் போன்றவை, அமுதம் ஊறுபவை, உடம்பில் தங்கியிருப்பவை.