உள்ளத்தை உருக்குபவை. அத்தகைய திருவடிகளை உடையவனாகிய உத்தரகோசமங்கை மன்னன் தங்கியுள்ள திருவிடைமருதூரின் சிறப்பினைப் பாடிப் பொன்னூசல் ஆடுவோமாக!

சொற்பொருள்:மூன்றாங் கிலங்கு நயனத்தின் - மூன்று கண்களை உடைய சிவபெருமான். மூவாத - முதுமையடையாத. ஊன் - உடல் மஞ்ஞை - மயில்

முன்னீறும் ஆதியு மில்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி யிமையோர்கள் தாம் நிற்பத்
தன்னீ றெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

விளக்கவுரை: பொன்னிறம் வாய்ந்த தழும்புகளையே அணிகலன்களாகப் பெற்றிருக்கும் அழகான கொங்கைகளையுடைய பெண்களே! முடிவும் முதலும் இல்லாதவன் எம்பெருமான். பலநூறு கோடி முனிவரும் தேவரும் அவனுடைய திருநீற்றைப் பெறுவதற்காகக் கூட்டமாகக் கூடி நிற்கும்போது, அவர்களுக்கல்லாமல் எனக்கு மட்டும் வழங்கியவன் அவன். அவனுடைய பெருங்கருணையால் நிலைத்த தன்மையுடன் எழில்பெற்று விளங்குவதே உத்தரகோசமங்கை. அங்கு ஒளிற்றும் மாட மாளிகைகளைப் பாடி நாம் பொன்னூசல் ஆடுவோமாக!

சொற்பொருள்:முன்ஈறு - முடிவு. ஆதி - முதல். முனிவர் குழாம் - முனிவர் கூட்டம்

நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தரகோசமங்கை
அஞ்சுசொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சுமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ.

விளக்கவுரை: திரண்ட சங்கு வளையல்களை அணிந்துள்ள பெண்களே! நம் பெருமான், விஷம் தங்கிய கழுத்தினை உடையவன்; அனைத்து உலகங்களுக்கும் தலைவன். மேகங்கள் தவழ்கின்ற மாட மாளிகைகளைக் கொண்ட உத்தரகோசமங்கை என்னும் திருத்தலத்தில் அழகிய சொற்களை உடைய உமாதேவியாரோடு கூடியிருப்பவன். அடியவர் தம் உள்ளங்களில் நிலைத்து நின்று அமுதமாகப் பெருக்கெடுத்து அருள் வழங்குபவன். இறப்பு, பிறப்பு ஆகிய இருவகை வினைகளையும் போக்குபவன். அத்தகையவனுடைய தூய்மையான புகழைப் பாடி நாம் பொன்னூசல் ஆடுவோமாக!

சொற்பொருள்:நஞ்சு - விசம், அண்டத்தவர் நாதன் - உலகங்களுக்குத் தலைவன், மஞ்சு - மேகம், அம்சொல் - அழகிய சொல், துஞ்சல் - இறப்பு, புஞ்சமார் - திரட்சியான.

ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ.