விளக்கவுரை:அணிகலன்கள் அணிந்துள்ள அழகான கொங்கைகளை உடைய பெண்களே! பிரமனாலும் திருமாலாலும், அவன் ஆணா, அலியோ, பெண்ணா என்று அறிய முடியாமல், சோதிச் சுடர் வடிவமாய்க் காட்சியளித்தவன் எம்பெருமான். அவன் கடலில் தோன்றிய கடுமையான விஷத்தை உண்டு, தேவர்கள் பயப்படாமல் இருக்கும்படி தனது பெருங்கருணையினால் வாழ்வித்து அருளியவன். உத்தரகோசமங்கை என்னும் திருத்தலத்தில் வளைந்த பிறையினைச் சூடிய ஆடல்வல்லானாகத் திருக்காட்சி வழங்குபவன். அவனுடைய பண்புகளைப் புகழ்ந்து பாடி நாம் பொன்னூசல் ஆடுவோமாக.
சொற்பொருள்: அரிவை - பெண், தேவர் குழாம் - தேவர் கூட்டம், ஊண் - உணவு, நஞ்சு - விஷம், கோணார் பிறைச் சென்னி - வளர்ந்த சந்திரப் பிறையினைத் தன் தலையில் சூடிய சிவபெருமான்.
மாதாடு பாகத்தன் உத்திர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.
விளக்கவுரை:தாமரை மொட்டுகளைப் போன்று அசைந்தாடுகின்ற அணிகலன்களைச் சூடியுள்ள கொங்கைகளைக் கொண்ட பெண்களே! உமாதேவியாரைத் தன் உடலில் ஒரு பாகமாய்க் கொண்டவன்; உத்தரகோசமங்கை என்னும் திருத்தலத்தை உடையவன். மகரந்தப் பொடி சிந்துகின்ற அழகிய கொன்றை மாலையினை அணிந்து சடையினை உடையவன். தன்னுடைய அடியாருள் ஒருவனாக என்னையும் அன்புகாட்டி அனைத்துக் கொண்டவன். என்னுடைய பழைமையான பிறவித் தீமையைத் தொடரச் செய்யாமல் தண்டித்தவன். அவனே எம் சிவபெருமான். அவனுடைய குணங்களைப் புகழ்ந்து பாடி நாம் பொன்னூசல் ஆடுவோமாக!
சொற்பொருள்: தாது — மகரந்தப் பொடி; தொல்பிறவி — பழைமையான பிறவி.
உன்னற் கரியதிரு உத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன் புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல்
என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்
பொன்னாத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.
விளக்கவுரை:அழகான அணிகலன்களைக் கொண்ட கொங்கைகளையும் திருமகளைப் போன்ற அழகையும் உடைய பெண்களே! உத்தரகோசமங்கை என்னும் திருத்தலம் மனதாலும் எண்ணிப் பார்க்க இயலாத பெருமிதம் உடையது. அத்திருத்தலத்தில் மறைகளின் தலைவனாகிய இறைவன் நிலைபெற்ற பேரழகுத் திருவுருவாக விளங்குகின்றான்.
அவனுடைய மேலான் தன்மைகளையெல்லாம் புகழ்ந்து பணிவுடன் வணங்க, நம்முடைய தீவினைகளை யெல்லாம் முற்றிலுமாகப் போக்கி விடுவான். என் அப்பனாகிய அவன் என்னுடைய பாவத்தைப் போக்கி என்னையும் ஆட்கொண்டான். நடையழகு கொண்ட அன்னப்பறவையின்மேல் ஏறிநின்று நடனம் ஆடும் அழகான வண்ணமயில் போல நாமும் இந்தப் பொன்னூசலின் மேல் ஏறி நின்று இறைவனின் அழகையெல்லாம் புகழ்ந்து பாடிப் பொன்னூசல் ஆடுவோமாக! கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்