சால அமுதுண்டு தாழ்கடலின் மீதழுந்து
ஞான மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
பூளத் தகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ.

விளக்கவுரை: எம்பெருமானாகிய சிவபெருமான் அழகான கயிலை மலையின் சிகரத்திலிருந்து இவ்வுலகில் எழுந்தருளியவன். இந்த நிலவுலகில் மிகுந்த அளவிலான அமுதத்தை உண்டவன். ஆழமான கடலின்மேல் பொங்கி எழுகின்ற அலைப்போல உத்தரகோசமங்கை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவன். திருமாலும் திருவடிகளைக் காண இயலாத அருஞ்சிறப்பினை உடையவன். அத்தகைய எம்பெருமானின் மேலான பண்புகளை உடல் சிலிர்த்து, உள்ளம் நெகிழ்ந்து, வாய்மணக்கப் பாடி நாமும் பொன்னூசல் ஆடுவோமாக!

சொற்பொருள்: குவலயம் — உலகம். சால அமுதுண்டு — மிகுந்த அளவிலான அமுதத்தை உண்டு. பரி — குதிரை. மாலுக்கரியான் — திருமாலும் காண்பதற்கு அரியவன். பூளத்து — உடல் சிலிர்த்து.

தெங்குலவு சோலைத் திருவுத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட்டு எம்மையும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையும் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

விளக்கவுரை:அணிகலன்கள் அணிந்த அழகான கொங்கைகளை உடைய பெண்களே! தென்னை மரங்கள் நிறைந்துள்ள குளிர்சோலைகளைக் கொண்டது திருவுத்தரகோசமங்கை. அவ்விடத்தில் ஒப்பற்ற சுடர் வடிவில் நிலையாகத் தங்கியிருப்பவன் எம்பெருமான். அவன் தானாகவே முன்வந்து, எம் பிறவியென்னும் விலங்கினை அறுத்து, தன்னுடைய திருமேனியில் பாகங்கொண்ட உமாதேவியும் தானுமாக வந்தருளி எம்மைப் போன்றவரையும் தனக்கு அடிமையாக்கிக் கொண்டான். தேன்பொழியும் கொன்றை மலர்மாலையினை அணிந்துள்ள செஞ்சடையனாகிய சிவபரம்பொருளின் நற்பண்பு நலன்களைப் புகழ்ந்து பாடி நாமும் பொன்னூசல் ஆடுவோமாக!

சொற்பொருள்: தெங்கு — தென்னை மரம். கொங்கு — தேன். பூண்முலையீர் — அழகான அணிகலன்கள் அணிந்த கொங்கைகளையுடைய பெண்களே!

உத்திரகோசமங்கை விளக்கப் பாடல்

ஆலால சுந்தரம், கல்யாண சுந்தரம், மீனாட்சி சுந்தரம், காமாட்சி சுந்தரம்,
சிவசிதம்பரம் சுந்தரம், திருச்சிற்றம்பலம், தில்லை அம்பலம், பொன்னம்பலம்.

அர்த்த ஜாம பூஜை பைரவர் வழிபாடு

விரித்த பல் கதிர் கொள் சூலம், வெடிபடு தமருகம் கை
தரித்தது ஓர் கோல கால பயிரவன் ஆகி, வேலம்
உரித்து, உமை அஞ்சக் கண்டு, ஓண் திரு மணிவாய் விள்ளச்
சிரித்து, அருள் செய்தார்-செறைச் செந்நெறிச் செல்வனாரே.