உடையவனே! முதல், நடு, முடிவு, இம்மூன்றும் ஆனவனே! இவை மூன்றும் அல்லாதவனாகவும் உள்ளவனே!
என்னை வலிந்து ஆட்கொண்ட எம் தந்தையாகிய பெருமானே! கூர்மையான மெய்யறிவு கொண்டு தேர்ந்து
தெளிந்து உணர்பவருடைய எண்ணத்தினாலும்,
சொற்பொருள் :
ஆதி - முதல். அந்தம் - இறுதி. எந்தை - எம் தந்தை.
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
விளக்கவுரை :
நோக்குவதற்கு அரிதாகிய நோக்கானவனே! நுட்பமாய் உணர்வதற்கு அரிதாகிய நுட்பமானவனே!
மறைவும், தோற்றமும் அவற்றின் தொடர்புகளும் இல்லாத அறத்தின் உருவானவனே!
எல்லா வகையிலும் எம்மைக் காக்கும் இறைவனே! காண்பதற்கு அரிய பெருஞ்சுடரே!
அன்பருக்கு அருள்கின்ற பேரின்பப் பேராறே! எம் தந்தையே! உயர்வாகி நிலைத்த காட்சி தரும்
ஒளிச்சுடராகி, நாவை அசைத்துக் கூற இயலாத நுட்ப உணர்வாகி,
சொற்பொருள் :
காண்பரிய - காண்பதற்கு அரிதான.
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
விளக்கவுரை :
பல மாறுபாடுகளைக் கொண்ட இம்மண்ணுலகில், வெவ்வேறு வடிவங்களாய் தோன்றி,
உண்மை ஞானிகளால் உணரக்கூடிய உறுதிப்பொருள் ஆனவனே! தெளிவானவனே!
எனது நெஞ்சின் நினைவில், ஊற்றுப் பெருக்கான உண்பதற்கினிய அமுதமானவனே!
என்னை அடிமை கொண்டவனே! தன் இயல்பில் மாறுபட்ட ஊன் என்னும் இவ்வுடம்பில்
இருப்பதற்கு நான் உள்ளம் பொறுக்க மாட்டேன். எம்முடைய தலைவனே!
சிவபெருமானே! ‘ஓ’ என்று,
சொற்பொருள் :
அரன் - சிவபெருமான்.
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
விளக்கவுரை :
உம்மிடம் விண்ணப்பம் செய்து, உம்மை வணங்கி உம் புகழ் பாடி இருந்ததன் பயனாக,
எம்மிடம் குடிகொண்டிருந்த பொய்கள் யாவும் அழிந்து, உண்மையறிவு பெற்று மெய்யடியார் ஆனவர்,
மீண்டும் இவ்வுலகில் பிறந்து, வினைப்பயன் காரணமாக வரும் பிறப்பைச் சாராமல்,
வஞ்சனைகள் செய்யும் ஐம்புலன்களுக்கு இருப்பிடமாய் இருக்கும் உடலால் உண்டாகும்
பாசத் தொடர்புகளை ஒழிக்க வல்லவனே! நள்ளிருளில் நடனம் ஆடும் தலைவனே!
தில்லையில் கூத்தாடுபவனே! தென்பாண்டி நாட்டை உடையவனே!